×

வெஸ்ட் இண்டீஸ் டோட்டல் சரண்டர் தொடரை வென்றது இந்தியா

ஐதராபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டெஸ்டில், 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 311 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரோஸ்டன் சேஸ் 106, கேப்டன் ஹோல்டர் 52 ரன் விளாசினர். இந்திய பந்துவீச்சில் உமேஷ் யாதவ் 6 விக்கெட் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன் எடுத்திருந்தது. ராகுல் 4, பிரித்வி 70, புஜாரா 10, கேப்டன் கோஹ்லி 45 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ரகானே 75 ரன், பன்ட் 85 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். இருவரும் சதம் விளாசுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரகானே 80 ரன் (183 பந்து, 7 பவுண்டரி) எடுத்து ஹோல்டர் வேகத்தில் ஹோப் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த ஜடேஜா டக் அவுட்டாகி வெளியேற, ரிஷப் பன்ட் (92 ரன் (134 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) கேப்ரியல் பந்துவீச்சில் ஹெட்மயரிடம் கேட்ச் கொடுத்து சதமடிக்கும் வாய்ப்பை வீணடித்தார். அஷ்வின் ஒரு முனையில் உறுதியுடன் விளையாட... குல்தீப் 6, உமேஷ் 2 ரன்னில் பெவிலியன் திரும்பினர். அஷ்வின் 35 ரன் (83 பந்து, 4 பவுண்டரி) விளாசி கேப்ரியல் வேகத்தில் கிளீன் போல்டாக, இந்தியா முதல் இன்னிங்சில் 367 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தாகூர் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா நேற்று 59 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்தது குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் கேப்டன் ஹோல்டர் 5, கேப்ரியல் 3, வாரிகன் 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 56 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ், இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறியது. தொடக்க வீரர்கள் பிராத்வெய்ட், பாவெல் இருவரும் டக் அவுட்டானது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது. உமேஷ் யாதவின் துல்லியமான வேகப் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சரணடைந்த அந்த அணி 46.1 ஓவரில் வெறும் 127 ரன் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது (3 பேர் டக் அவுட்). அம்ப்ரிஸ் அதிகபட்சமாக 38 ரன் எடுத்தார். ஹோப் 28, ஹெட்மயர் 17, ஹோல்டர் 19 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். பிஷூ 10 ரன் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் உமேஷ் 4, ஜடேஜா 3, அஷ்வின் 2, குல்தீப் 1 விக்கெட் வீழ்த்தினர்.

சொந்த மண்ணில் நடந்த டெஸ்டில் 10 விக்கெட் வீழ்த்திய 3வது இந்திய வேகப் பந்துவீச்சாளர் என்ற பெருமை (முதல் இன்னிங்சில் 6, 2வது இன்னிங்சில் 4) உமேஷ் யாதவுக்கு கிடைத்தது. இதைத் தொடர்ந்து 75 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியா 16.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 75 ரன் எடுத்து அபாரமாக வென்றது. பிரித்வி ஷா, லோகேஷ் ராகுல் இருவரும் தலா 33 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் வெற்றியை வசப்படுத்தினர். இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. உமேஷ் யாதவ் ஆட்ட நாயகன் விருதும், பிரித்வி ஷா தொடர் நாயகன் விருதும் பெற்றனர். அடுத்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதுகின்றன. முதல் ஒருநாள் போட்டி கவுகாத்தியில் 21ம் தேதி நடைபெறுகிறது.

உள்ளூரில் தொடர்ச்சியாக 10வது தொடர் வெற்றி!
இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10வது டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. ஆஸி. அணி 2 முறை இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள நிலையில், வேறு எந்த அணியும் தொடர்ச்சியாக உள்ளூரில் 8 தொடர்களுக்கு மேல் வென்றதில்லை.
* 2013ல் இருந்து சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 23 வெற்றி, 1 தோல்வி, 5 டிரா கண்டுள்ளது.
* இந்திய அணி உள்ளூரில் தொடர்ச்சியாக 3வது டெஸ்டில் 3வது நாளிலேயே வெற்றியை வசப்படுத்தி உள்ளது.
* வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, இந்தியா தொடர்ச்சியாக கைப்பற்றிய 7வது டெஸ்ட் தொடர் இது.
* இந்த தொடரில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு சராசரியாக 57.42 ரன் குவித்த நிலையில், வெஸ்ட் இண்டீசின் சராசரி 20.37 ஆக இருந்தது.
* கபில் தேவ் (10-135 மற்றும் 11-146), ஜவகல் ஸ்ரீநாத் (13-132) ஆகியோரை தொடர்ந்து சொந்த மண்ணில் நடந்த டெஸ்டில் 10 விக்கெட் கைப்பற்றிய 3வது இந்திய வேகம் என்ற பெருமை உமேஷ் யாதவுக்கு கிடைத்துள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : West Indies Total Surrender Series ,India , West Indies Test, India, series
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...