×

ஆசிய பாரா விளையாட்டு போட்டி: 72 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல்

ஜகார்தா: ஆசிய பாரா விளையாட்டு போட்டியில், இந்திய வீரர்கள் 15 தங்கம் உட்பட 72 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். சீனா 319 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்தது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் கடந்த 6ம் தேதியன்று துவங்கியது. இந்தியா உட்பட 43 நாடுகளை சேர்ந்த 2,831 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன.  கடைசி நாளான நேற்று இந்திய வீரர்கள் 2 தங்கப் பதக்கங்களை வென்றனர். ஆண்களுக்கான பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீரர் தருண் 21-16, 21-6 என்ற நேர் செட்டில் சீனாவின் யுயங் காவோவை வீழ்த்தி தங்கம் வென்றார். மற்றொரு பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் 21-19, 15-21, 21-14 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் யுகுன் ருகேன்டியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
 
ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 33 வெண்கலம் என மொத்தம் 72 பதக்கங்கள் குவித்து பட்டியலில் 9வது இடம் பிடித்தது. கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இந்தியா 3 தங்கம், 14 வெள்ளி, 16 வெண்கலத்துடன் மொத்தம் 33 பதக்கங்களே வென்றிருந்தது. இந்தமுறை இந்திய வீரர், வீராங்கனைகள் அதிக பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். பதக்கம் வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. சீனா 172 தங்கம், 88 வெள்ளி, 59 வெண்கலம் என மொத்தம் 319 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்தது. தென்கொரியா 145 பதக்கங்கள் வென்று 2வது இடத்தையும், ஈரான் 136 பதக்கங்கள் பெற்று 3வது இடத்தையும் பிடித்தன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Asian Para Match Competition: India , Asian Para Sports Competition, India
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...