×

பாகிஸ்தானில் இன்று 35 தொகுதிகளில் இடைத்தேர்தல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்று 35 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்துக்கும், மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தல்களில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றனர். அந்த நாட்டில் தற்போது பிரதமராகி உள்ள இம்ரான்கான் கூட அந்த தேர்தலில் 5 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டார். அனைத்து தொகுதிகளிலும் வென்றார். இப்படி வெற்றி பெற்றவர்கள் ஒரு தொகுதியை வைத்துக்கொண்டு எஞ்சிய தொகுதிகளில் ராஜினாமா செய்துள்ளனர். அந்த வகையில் அங்கு மொத்தம் 35 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. அவற்றில் 11 தொகுதிகள் நாடாளுமன்ற தொகுதிகள் ஆகும். எஞ்சியவை மாகாண சட்டசபை தொகுதிகளாகும்.

11 நாடாளுமன்ற தொகுதிகளில் 9 தொகுதிகள் பஞ்சாப் மாகாணத்திலும், சிந்து மற்றும் கைபர் பக்துங்வா மாகாணங்களில் தலா ஒரு தொகுதியும் உள்ளது. இடைத்தேர்தல் நடக்கிற 35 தொகுதிகளில் 641 வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த தொகுதிகளில் மொத்தம் 50 லட்சத்துக்கும் மேலான வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 23 லட்சம் பேர் பெண் வாக்காளர்கள், 27 லட்சம் பேர் ஆண் வாக்காளாகும். பாகிஸ்தானில் நடந்த பொதுத்தேர்தலில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தனிப்பெரும் கட்சியாக வந்து ஆட்சியைப் பிடித்த நிலையில், சந்திக்கிற முதல் இடைத்தேர்தல் இதுவாகும். எனவே இந்த தொகுதிகளில் வெற்றி பெறுவதில் அந்தக் கட்சி கண்ணும், கருத்துமாக உள்ளது. அதே நேரத்தில் சிறையில் இருந்து விடுதலையாகி உள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், தனது கட்சிக்கு வெற்றிக்கனியை பறித்துத்தர வேண்டிய நிலையில் உள்ளார்.

எனவே ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இந்த இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இன்றைய இடைத்தேர்தலுக்காக பாகிஸ்தானில் 5 ஆயிரத்து 193 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் 848 வாக்குச்சாவடிகள் மிகுந்த பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் உயர் அதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, “மிகுந்த பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அவற்றில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பினை கவனிப்பார்கள்” என்று குறிப்பிட்டார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakistan ,by-elections ,constituencies , Pakistan, 35 block, election
× RELATED பாகிஸ்தானில் பயங்கரம் தற்கொலை படை தாக்குதல் 5 சீன பொறியாளர்கள் பலி