போலீஸ் சேனல்

வசூல் குவியுது... கேமராவை ஆப் பன்னு...

கோவை சூலூர் மேற்கு எல்லையை ஒட்டி அமைந்துள்ளது காமாட்சிபுரம் போலீஸ் செக்போஸ்ட். இது, சிங்காநல்லூர் காவல் நிலையத்தின் ஒரு அங்கம். இதன் அருகிலுள்ள மாடியில் 360 டிகிரி சுழலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, அதன் இணைப்பு நேரடியாக மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் இருந்தபடியே, இவ்வழியாக செல்லும் வாகனங்களை கண்காணிக்க முடியும். ஆனால், இந்த கேமரா, மாலை 6 மணிக்கு பிறகு சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு விடுகிறது. காரணம், இந்த செக்போஸ்ட்டை கடந்து செல்லும் சரக்கு வாகனங்களை ஒன்றுவிடாமல் மடக்கி, வசூல் வேட்ைட நடத்துகின்றனர். இந்த காட்சி கேமராவில் பதிவாகிவிட்டால் ஐயா வேட்டு வெச்சிருவாரு.... என்ற பயத்தில் டெக்னிக்கலாக இப்படி சுவிட்ச் ஆப் செய்து விடுகின்றனர்.

மீண்டும் இந்த கேமரா மறுநாள் அதிகாலை 6 மணிக்கு சுவிட்ச் ஆன் செய்யப்படுகிறது. ஏம்பா...’’ உங்க ஏரியா கேமராவில் இருந்து சிக்னல் வரவில்லையே...’’ என காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகள் யாரேனும் கேட்டால் அய்யா, அது கொஞ்சம் ரிப்பேரா இருக்கு... காலையில சரியாகிவிடும்...’’ என பதிலளிக்கிறார்கள் செக்போஸ்ட் புத்திசாலிகள். இந்த செக்போஸ்டில் பணிபுரியும் எஸ்.ஐ., ஏட்டு, காவலர், இவர்களை கண்காணிக்க அவ்வப்போது வந்து செல்லும் ஆய்வாளர் என எல்லோரும் ஒரே ஜாலிதான்.

மணல் கொள்ளையரிடம் மாமூல் வசூலிக்கும் போலீஸ்

மதுரை நகர் மற்றும் மாவட்டத்தில் சோழவந்தான், காடுபட்டி, விக்கிரமங்கலம், சிலைமான், திருமங்கலம், பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் வைகை ஆறு மற்றும் ஓடை பகுதிகளில் அரசு அனுமதி இல்லாமல் தொடர்ந்து மணல் திருட்டு அதிகரித்து வருகிறது. அந்தந்த பகுதி போலீசார் மணல் வியாபாரிகளிடம் மாதந்தோறும் மாமூல் வசூலித்துக் கொண்டு அவர்களுக்கு துணையாக இருப்பதாக புகார்கள் வருகின்றன. மணல் கடத்தி வரும் மாட்டுவண்டி, லாரி, வேன்களை பொதுமக்கள் பிடித்து கொடுத்தாலும், போலீசார் பணத்தை வாங்கி கொண்டு அவர்களை விட்டு விடுகின்றனராம்.

 இதனால் சோழவந்தான் உள்ளிட்ட வைகை ஆற்று பகுதிகளில் பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு, தண்ணீர் வரும்போது உயிர் பலி அதிகரிக்கிறது. தற்போது லாரி, வேன்களில் மணல் திருடுவதை தவிர்த்து சாக்குப்பைகளில் மணல் அள்ளி டூவீலரில் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. டூவீலரில் திருடி வரும் நபரிடம் 100 தொடங்கி, லாரிகளில் வரும் நபர்களிடம் 5,000 வரை போலீசார் வசூல்வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர் என்கின்றனர் பொதுமக்கள்.

மரத்தடியில் கமிஷனை கறக்கும் அதிகாரிகள்

விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் எஸ்.பி அறைக்கு கீழே மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பணமோசடி, வேலைவாய்ப்பு மோசடி  புகார்கள் அதிகளவு குவியும். இந்த அலுவலகத்தில்  கிங் மேக்கராக முன்னாள் முதல்வரும், பேரறிஞரின் பெயரைக்கொண்ட ஒருத்தரும்,  பழம்பெரும் வில்லன் நடிகர் ஜெயமான சங்கர்  பெயரைக்கொண்டவரும் இருக்கிறார்கள். பணமோசடி, வேலைவாய்ப்பு மோசடி புகார்களை இவர்கள் தான் விசாரிப்பார்கள். வழக்கு பதிவு செய்வதற்கு முன்பு இரண்டு தரப்பினரையும் அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வதில் இவர்கள் கைதேர்ந்தவர்களாம்.

நீதிமன்றம், வழக்குன்னு போன பணம் கிடைக்காது, நாங்கள் பேசி பணத்தை வாங்கி தருகிறோம் என பைசா கறப்பதில் இவர்கள் கில்லாடிகளாம்.  30 சதவீத கமிஷனுக்கு ஒப்புக்கொண்டால் டீல் ஓகே செய்துவிடுவார்கள். இந்த மாதிரியான டீலிங்கை அலுவலகத்தில் வைத்துக்கொள்ளாமல் பின்புறமாக உள்ள டிபிஓ மைதான மரத்தடியில் தான் அரங்கேற்றுவார்கள். ஆளுக்கொரு மரத்தடியில் நின்று டீலை முடிப்பதும், பின்னர் அலுவலகத்திற்கு வந்து வாபஸ் மனுவில் கையெழுத்துபோடுவதுமாக குற்றப்பிரிவு அலுவலகமே மரத்தடியே கதியோ என்று கிடக்கிறதாம்.

வட போச்சே

நாகர்கோவிலில் மது விலக்கு பிரிவு டி.எஸ்.பி. பணியிடம் காலியாக இருந்தது. சமீபத்தில் தான் புதிய டி.எஸ்.பி.யாக ஜெயராஜ் என்பவரை நியமித்துள்ளனர். டி.எஸ்.பி. பணியிடம் காலியாக இருந்த சமயத்தில் மதுவிலக்கு பிரிவில் இருக்கும் போலீசார் சிலர் மாமூல் வசூலில் கொடி கட்டி பறந்துள்ளார்கள். மாதம் 30 ஆயிரம் வீதம் டி.எஸ்.பி. பணியிடத்துக்கு என தனியாக வாங்கி பங்கிட்டுள்ளனர். இல்லாத டி.எஸ்.பி.க்கு மாமூல் வசூலித்த பெருமை மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தான் உண்டு என்று உள்ளூர் போலீஸ்காரர்களே மூக்கில் விரல் வைத்து பேசி வந்தனர். இப்போது டி.எஸ்.பி. பணியிடத்துக்கு நியமிக்கப்பட்டு இருப்பவர் எப்படி டைப் என்று தெரியாததால், மாமூல் வசூலிப்பவர்கள் கப்சிப் ஆகி இருக்கிறார்கள். எப்படியும் புதிதாக வருபவர் கண்டிப்பாக அதிரடி நடவடிக்கையை காட்டுவது வழக்கம் தான்.

எனவே தங்களுக்கு மாமூல் அள்ளி தருபவர்களிடம், கொஞ்ச நாளைக்கு வெளியே தெரியும் படி திருட்டு மது விற்பனை செய்யாதீர்கள். புதியவரை மோப்பம் பிடித்து அவர் எப்படி என்று தெரிந்த பிறகு, வெளிப்படையாக வியாபாரம் வைத்துக் கொள்ளலாம். எனவே அதுவரை பொறுமையாக இருங்கள் என்று தாங்கள் வாங்கிய காசுக்கு விசுவாச வேலையை செய்து வருகிறார்களாம் காக்கிகள் சிலர். எனவே புதியவர் எப்படி? என்ற எதிர்பார்ப்பில் மாமூல் வசூலிக்கும் காக்கிகள் மட்டுமின்றி, திருட்டு மது விற்பனையாளர்களும் உள்ளார்களாம். டி.எஸ்.பி. பணியிடம் காலியாக இருந்ததால், மாதந்தோறும் ஒரே கல்லில் இரு மாங்காய் போல் இரட்டை வசூல் கிடைத்து வந்தது. இப்போது காலி பணியிடம் நிரப்பப்பட்டதால், நமக்கு ஒரு வசூல் காலியாகி விட்டதே என்று நடிகர் வடிவேல் பாணியில் வட போச்சே என்ற கவலையில் கண்ணத்தில் கை வைத்து நொந்து போய் உள்ளார்களாம். புதியவர் மிகவும் கண்டிப்பானவராக இருந்தால் என்ன செய்யலாம்? என்ற மாற்று யோசனையும் செய்து வருகிறார்களாம்.

நாங்களும் நாலு காசு  பார்க்க வேண்டாமா...?

ஈரோடு மாவட்டம் மலைப்பகுதி சப்-டிவிஷனில் பணியாற்றி வந்த டிஎஸ்பி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் பணியிடம் மாற்றப்பட்டார். ஆனால், இந்த பணியிட மாற்றத்தை அவரே விருப்பப்பட்டு வாங்கிச் சென்றுள்ளார். காரணம், ஈரோடு மாவட்ட எஸ்.பி.யின் டார்ச்சர் என்கிறார். பணியில் அலட்சியமாக இருக்கும் அதிகாரி யாராக இருந்தாலும் அவர்களை ஈரோடு எஸ்.பி., விட்டு வைப்பதில்லை. வறுத்தெடுத்து விடுகிறார். இதற்கு பயந்தே அவர் மாவட்டம் விட்டு, மாவட்டம் ஓடிவிட்டார். இவரைப்போலவே இதர சப்-டிவிஷன் டி.எஸ்.பி.க்களும் வேறு மாவட்டத்துக்கு தப்பி ஓட தயார் நிலையில் உள்ளனர்.

தொடர் மனஅழுத்தம் காரணமாக, பவானி டிஎஸ்பி ஒருவர், உள்ளூர் அமைச்சரிடம் சென்று, ஐயா... எனக்கு வேறு மாவட்டத்துக்கு இடமாறுதல் வாங்கித்தாருங்கள்... என கெஞ்சியுள்ளார். அவரோ, போய் வேலையை பாரு... நான் பாத்துக்கிறேன்... என ஆறுதல் கூறி அனுப்பியுள்ளார். ஏம்பா.. இப்படி ஆளாளுக்கு தலைதெறிக்க ஓடுறீங்க... என ஆய்வுக்கு சென்ற எஸ்.பி., கூலாக கேட்க, எங்களை விட்டுருங்க ப்ளீஸ்... என சில அதிகாரிகள் கெஞ்சியுள்ளனர்.’’ வசூலும் இல்ல.. நிம்மதியும் இல்ல... பிறகு எப்படி இங்கு பணியாற்ற முடியும். ஏதோ கொஞ்சம் கண்டுக்காம விட்டாதானே நாங்களும் நாலு காசு பார்க்க முடியும்... என புலம்பியபடி பணியாற்றி வருகின்றனர்.

குற்றவாளியை காப்பாற்றிய அமைச்சர்; உடந்தையான உச்ச அதிகாரி

திருச்சியில்  பல்வேறு இடங்களில் வீடுகளில் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் தொடர்  கதையாக இருந்து வந்தது. அவர்களை பிடிக்க எஸ்பி ஜியாவுல் ஹக்  உத்தரவின் பேரில், ஸ்பெஷல் டீமே அமைக்கப்பட்டது. அந்த டீம் குற்றவாளிகளை  சல்லடை போட்டு தேடி வந்த நிலையில் சமீபத்தில் 2 பேர்  சிக்கினார்களாம்....அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீஸ் பாணியில்  நடத்தப்பட்ட விசாரணையில், அந்த 2 பேரும் எங்கெல்லாம் திருடினோம் என்ற உண்மையை  ஸ்பெஷல் டீமிடம் கக்கியதோடு, மொத்தம் 150 பவுன் திருடியதும், அதில் 90 பவுனை கரூரில் ஒரு பிரபல நகைக்கடையில் விற்றதையும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

அந்த  2 பேரையும் குறிப்பிட்ட அந்த நகைக்கடைக்கு அழைத்து சென்ற ஸ்பெஷல் டீம்  நகைக் கடையில்  விசாரணை நடத்தினார்களாம்... இதில் தங்களிடம் தான் 90 பவுன்  விற்றதை நகை கடை அதிபர் ஒத்துக் கொண்டாராம்... இதையடுத்து அந்த 90 பவுன்  நகையை பறிமுதல் செய்யும் நேரத்தில், மத்திய மண்டல உச்ச அதிகாரியிடம் இருந்து ஸ்பெஷல் டீம் இன்ஸ்பெக்டருக்கு அழைப்பு வந்ததாம்...

ஜமுக்காளம் பகுதி அமைச்சர் தன்னிடம் நகைக்கடை பற்றி பேசியதாவும், குறிப்பிட்ட நகைக் கடையில் இது பற்றி எதுவும் விசாரிக்க வேண்டாம்... நகையை பற்றி எதுவும் பேச வேண்டாம் என கூறி விட்டாராம்.... இதனால் அந்த ஸ்பெஷல் டீம், 90 பவுனை உடனே பறிமுதல் பண்ணி இருந்தால் மாவட்டத்தில் ஸ்டேஷன்களில் உள்ள பாதி கேஸை முடித்திருக்கலாம்....  90 பவுனையும் பறிமுதல் பண்ண முடியல... மீதியுள்ள 60 பவுன் எங்கு இருக்கிறது  என கண்டுபிடிக்க முடியாமலும், குற்றவாளி 2 ேபரையும் அரஸ்ட் காட்டினால் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை காட்ட வேண்டும். அரஸ்ட் காட்ட வேண்டும் என்றால் 2 பேர் மீது எந்த பிரிவின் கீழ் கேஸ் போடுவது என்றும், அரஸ்ட் காட்ட முடியாமல் ஸ்பெஷல் டீம் விழி

பிதுங்கி இருக்கிறார்களாம்..

வசூல் வேட்டையில் கொடிகட்டி பறக்கும் டிஎஸ்பி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி போலீஸ் உயர் அதிகாரியாக இப்பவர், சேலத்தை சேர்ந்த குருவின் பெயரை கொண்டவர் உள்ளார். அறந்தாங்கி பகுதியில் லாட்டரி, கஞ்சா, குட்கா, மணல் விற்பனையை ஊக்குவித்து வருகிறார். அதன்மூலம் மாதந்தோறும் பல ஆயிரங்களை மாமூலாக பெற்று வருகிறார். மாமூல் வசூலிப்பதற்காகவே ஐவர் கொண்ட குழு வைத்துள்ளார். இதுதவிர இவரது சப்டிவிசனுக்குள் யாராவது சிறிய அளவில் பெட்டிக்கடைகளில் வைத்து மதுபானம் விற்பது தெரியவந்தால், அங்கு செல்லும் இவரின் ஐவர் குழுவின் ஒருவர் அங்கிருந்து போனில் அதிகாரியை தொடர்பு கொள்வார். அந்த போன் மூலம் மது விற்பவரிடம் மாமூல் கேட்டு மிரட்டுவார். கடைக்காரர் குறைந்த அளவிலான பாட்டில் தான் விற்கிறேன் என்றால் அதெல்லாம் தெரியாது, ஒழுங்காக பணத்தை கொடு இல்லை என்றால் உன்மீது வழக்கு போடுவேன் எனக்கூறி போனை கட்பண்ணி விடுவார்.

இதற்கு பயந்து வேறு வழியின்றி கடைக்காரர் கடன்வாங்கி மாமூலை கொடுத்து அனுப்புவார். இதுதவிர அறந்தாங்கி நகரில் 22, ஆவுடையார்கோவிலில் 20, நாகுடியில் 5, ஆவணத்தான்கோட்டையில் 3, சுப்பிரமணியபுரத்தில் 2, அரசர்குளத்தில் 2 என 54 லாட்டரி சீட்டு கடைகள் மூலம் மாதம் குறைந்தது 3 லட்ச ரூபாய் பெற்று வருகிறார். மேலும் சமீபத்தில் ஐவர் குழுவில் உள்ளவர்கள் மீது அதிகாரிக்கு சந்தேகம் வந்ததால், அந்த குழுவை நம்பாமல் தற்போது தனது கேம்ப் ஆபிசில் வேலை பார்க்கும் சிறப்பு எஸ்.ஐ மூலம் வசூல் வேட்டை நடத்தி வருகிறார்.

யாரேனும் புகார் அளித்தால் நான் முதல்அமைச்சர் ஊர்க்காரன், என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டுகிறார். அதிகாரியின் பணி ஓய்வுக்கு 7 மாதம் உள்ள நிலையில் இவரின் வசூல் வேட்டை படுவேகமாக செல்கிறது. இவருக்கு யார் மணி கட்டுவது என தெரியாமல் போலீசார் விழி பிதுங்கி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: