×

ரகானே - பன்ட் ஜோடி அபார ஆட்டம் வலுவான நிலையில் இந்தியா

ஐதராபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டெஸ்டில் அஜிங்க்யா ரகானே - ரிஷப் பன்ட் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால், இந்திய அணி முதல் இன்னிங்சில் வலுவான முன்னிலை பெறும் வாய்ப்பு  ஏற்பட்டுள்ளது.ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 295 ரன் எடுத்திருந்தது. பாவெல் 22, ஷாய் ஹோப்  36, டோவ்ரிச் 30, கேப்டன் ஹோல்டர் 52 ரன் எடுத்தனர். ரோஸ்டன் சேஸ் 98 ரன், பிஷூ 2 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். பிஷூ மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, சதத்தை நிறைவு செய்த  சேஸ் 106 ரன்  (189 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி உமேஷ் வேகத்தில் கிளீன் போல்டானார்.அடுத்து வந்த கேப்ரியல் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேற, வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 311 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (101.4 ஓவர்). வாரிகன் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். வெஸ்ட்  இண்டீசின் கடைசி 3 விக்கெட்டையும் சாய்த்த உமேஷ், டெஸ்ட் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து அசத்தினார். அவர் 26.4 ஓவரில் 3 மெய்டன் உட்பட 88 ரன் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார்.  குல்தீப் 3, அஷ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ராகுல், பிரித்வி ஷா களமிறங்கினர். ஒரு முனையில் ராகுல் நிதானமாக விளையாட, அதிரடியில் இறங்கிய ஷா வெஸ்ட் இண்டீஸ்  பந்துவீச்சை பதம் பார்த்தார். அவர் 30 பந்தில் 42 ரன் எடுத்திருக்க, மறுமுனையில் 25 பந்துகளை சந்தித்த ராகுல் 4 ரன் மட்டுமே எடுத்து ஹோல்டர் வேகத்தில் கிளீன் போல்டானார். அடுத்து பிரித்வியுடன் புஜாரா இணைந்தார்.

39 பந்தில் அரை சதம் அடுத்த பிரித்வி, சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 70 ரன் எடுத்து (53 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்) வாரிகன் பந்துவீச்சில் ஹெட்மயர் வசம் பிடிபட்டார். புஜாரா 10 ரன்னில் வெளியேற,  இந்தியா 20 ஓவரில் 102 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், கேப்டன் கோஹ்லி - ரகானே ஜோடி 4வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 60 ரன் சேர்த்தது.கோஹ்லி 45 ரன் எடுத்து (78 பந்து, 5 பவுண்டரி) ஹோல்டர் வேகத்தில் எல்பிடபுள்யு முறையில் பெவிலியன் திரும்பினார். இந்திய அணியை விரைவில் சுருட்டி விடலாம் என்ற முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் உற்சாகமாக  தாக்குதல் நடத்த, ரகானே - ரிஷப் பன்ட் இணை உறுதியுடன் போராடி அதை முறியடித்தது. இவர்களைப் பிரிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் திணறினர். நம்பிக்கையுடன் விளையாடிய இருவரும் அரை சதம்  அடித்து அசத்தினர்.இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன் எடுத்துள்ளது. ரகானே 75 ரன் (174 பந்து, 6 பவுண்டரி), பன்ட் 85 ரன்னுடன் (120 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் உள்ளனர். கை  வசம் 6 விக்கெட் இருக்க, இந்திய அணி 3 ரன் மட்டுமே பின்தங்கியுள்ளதால் முதல் இன்னிங்சில் வலுவான முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் இன்று காலை புதிய பந்துடன் தாக்குதலை  தொடங்க உள்ள பரபரப்பான நிலையில் 3ம் நாள் ஆட்டம் மிகவும் சுவாரசியமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


சில்லி பாயின்ட்...
* இந்தியா - சீனா அணிகளிடையே நேற்று நடந்த நட்பு ரீதியிலான சர்வதேச கால்பந்து போட்டி 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
* மலேசியாவில் நடைபெற்ற ஜொகோர் கோப்பை ஹாக்கி போட்டித் தொடரின் பைனலில் இங்கிலாந்துடன் நேற்று மோதிய இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் போராடித் தோற்று வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி  அடைந்தது. லீக் சுற்றிலும் இங்கிலாந்து 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
* இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை செயலதிகாரி ஜோஹ்ரி ‘மி டூ’ பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு பிசிசிஐ நிர்வாகக் குழு  அவருக்கு உத்தரவிட்டுள்ளது.
* இலங்கை அணியுடன் தம்புல்லாவில் நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து 31 ரன் வித்தியாசத்தில் (டி/எல் விதி) வெற்றி பெற்றது, இங்கிலாந்து 50 ஓவரில் 278/9 (மோர்கன் 92, ரூட் 71, மலிங்கா 5 விக்கெட்);  இலங்கை 29 ஓவரில் 140/5.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Raghunaye - Pand ,India , Raghunaye - Pand,pair India, strong position
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!