விவசாயத்தை அடியோடு அழித்து அதிகாரிகள் துணையுடன் செம்மண் கடத்தல்: ஆரல்வாய்மொழியில் அதிர்ச்சி

நாகர்கோவில்: ஆரல்வாய்மொழி அருகே  விவசாயத்தை அழித்து செம்மண் கடத்தும் கும்பலுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாலை மறியல் நடத்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அருகே உள்ள ஆரல்வாய்மொழி,  குமாரபுரம், முப்பந்தல், தேவசகாயம் மவுண்டு ஆகிய இடங்கள்  செம்மண் நிறைந்த பகுதிகளாகும். இங்கு உள்ள மக்கள் விவசாயத்தையே பிரதான  தொழிலாக செய்து வருகின்றனர். இங்குள்ள பெரும்பான்மையான விவசாய நிலங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியே உள்ளது. இந்தநிலையில் முப்பந்தல், தேவசகாயம்மவுண்டு பகுதிகளில் செம்மண் திருட்டு அதிகளவில் நடந்து வருகிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் செம்மண் எடுப்பதற்கு அரசிடம் அனுமதி பெற்று விட்டு பல ஏக்கர் பரப்பளவிற்கு  பல அடி ஆழத்திற்கு தோண்டி செம்மண் அள்ளி வருகிறார்கள். மேலும் அனுமதி பெறுவதற்காக விண்ணப்பித்த இடத்தில் செம்மண் எடுக்காமல் அந்த இடத்தை அப்படியே விட்டுவிட்டு வேறு இடத்தில் மண் எடுக்கின்றனர். இதற்கு கனிம வளம் மற்றும் வருவாய்  துறை அதிகாரிகள்  துணை போவதாகவும், இதுவரை அனுமதி வாங்கிய   இடத்திற்கு  கனிமவள அதிகாரிகள் நேரடியாக சென்று அனுமதி வாங்கிய இடத்தில்தான் செம்மண் எடுக்கிறார்களா என்றும், நிர்ணயிக்கப்பட்ட ஆழத்தில் தான் எடுக்கிறார்களா எனவும் இதுவரை சென்று பார்க்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இவ்வாறு பல அடி ஆழத்திற்கு செம்மண் வெட்டி எடுத்து செல்வதால் தங்கள் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது என்றும், தண்ணீர் இல்லாமல் விவசாய செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும், விவசாயிகளின்  வாழ்வாதாரம் முற்றிலும் இழந்து வருகிறார்கள் என்றும், மலையடிவாரத்தில் பல அடி ஆழத்திற்கு செம்மண் தோண்டப்படுவதால்  நிலச்சரிவு ஏற்பட வாய்பு உள்ளதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
இது குறித்து பலமுறை புகார் அளித்தும் செம்மண் எடுக்கும் நபர்கள்  மீது  எந்தவித நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதி வழங்கிய இடத்தினை பார்வையிட்டு அனுமதி வழங்கிய இடத்தை விட அதிகமாகவோ, நிர்ணயித்த ஆழத்தினை விட அதிகமாக எடுக்கப்பட்டு இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED காவல்நிலைய அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்