தஞ்சை பெரியகோவிலில் 41 தொன்மையான சிலைகள் மாற்றப்பட்டுள்ளன : சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிர்ச்சி தகவல்!

தஞ்சாவூர் : தஞ்சை பெரியகோவிலில் இருந்து 41 தொன்மையான சிலைகள் மாற்றப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். தஞ்சை பெரியகோவிலில் மூன்றாவது முறையாக இன்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு நடத்தினர். பெரியகோவிலில் உள்ள அர்த்த மண்டபத்தில்தான் அனைத்து சிலைகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய தொல்லியல் துறை இயக்குநர் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அர்த்த மண்டபத்தில் ஆய்வு செய்தனர். தஞ்சை பெரியகோவில் மத்திய தொல்லியல் துறையின் கீழ் இயங்கி வருவதால், மத்திய தொல்லியல் துறை இயக்குநரும் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே கடந்த 15 நாட்களுக்கு முன்னர் தஞ்சை பெரியகோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஆய்வு செய்தனர்.

அப்போதே பல சிலைகளில் தற்கால எழுத்துகள் உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் ஆய்வு நடைபெற்றது. முன்னதாக பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு நடத்தினர். பசுபதீஸ்வரர் கோவிலில் இருந்த 382 சிலைகளில், 191 சிலைகள் ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்ட நிலையில், மற்ற சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், தொல்லியல் துறையினரும் இன்று ஆய்வு செய்தனர். அங்கும் பல தொன்மையான சிலைகள் மாற்ற வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தொல்லியல் துறை அதிகாரிகள் 15 பேரும், 50க்கும் மேற்பட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் இணைந்து தஞ்சை பெரியகோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு மொத்தம் எத்தனை சிலைகள் உள்ளன என்பது குறித்த தகவல்கள் அளிக்கவில்லை. ஆனால் 41 தொன்மையான சிலைகள் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளனர். மாற்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளில் தற்கால எழுத்துக்கள் உள்ளதாக கூறியுள்ளனர். கோயில் கும்பாபிஷேகம், புணரமைப்பு பணிகளின் போது சிலைகளை மாற்றி வைத்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் பண்ணை வீட்டில் சோழர் கால சிலைகள் மீட்க்கப்பட்டன. நூறுக்கணக்காக சிலைகளை மண்ணில் புதைத்து வைத்திருந்த நிலையில், ஐஐி பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவி போலீசார் அதனை மீட்டனர். அதனடிப்படையில்தான் தஞ்சை பெரியகோவிலில் இன்று ஆய்வு நடைபெற்றது என தகவல் வெளியாகியுள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED புதுக்கோட்டை அருகே 11 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு