ஜொகோர் கோப்பை ஜூனியர் ஹாக்கி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா: பைனலுக்கு முன்னேறி அசத்தல்

கோலாலம்பூர்: சுல்தான் ஆப் ஜொகோர் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டித் தொடரில், இந்திய அணி பலம் வாய்ந்த நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. மலேசியாவில் நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மலேசியா, நியூசிலாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்று ரவுண்ட் ராபின் லீக் சுற்றில் விளையாடி வருகின்றன. தொடர்ச்சியாக 3 லீக் ஆட்டங்களில் வெற்றியை வசப்படுத்தி இருந்த இந்திய அணி, தனது 4வது லீக் ஆட்டத்தில் நேற்று ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. தொடக்கத்தில் இருந்தே துடிப்புடன் விளையாடி கடும் நெருக்கடி கொடுத்த இந்திய அணி, 5வது நிமிடத்திலேயே குர்சாஹிப்ஜித் அபாரமாக கோல் அடிக்க முன்னிலை பெற்றது.

ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸி. அணியை திக்குமுக்காட வைத்த இந்திய அணிக்கு ஹஸ்பிரீத் (11வது நிமிடம்), மன்தீப் (14’), விஷ்ணுகாந்த் (15’) அடுத்தடுத்து கோல் போட்டு அசத்தினர். முதல் கால் மணி நேர ஆட்டத்திலேயே இந்தியா 4-0 என முன்னிலை பெற்றதால் ஆஸி. அணி பின்னர் தனது வியூகத்தை மாற்றி தாக்குதல் ஆட்டத்தில் இறங்கியது. அந்த அணியின் ஸ்டீபன்ஸ் 18வது, 35வது நிமிடத்தில் கோல் அடிக்க ஆட்டம் பரபரப்பானது. இதைத் தொடர்ந்து பதில் தாக்குதலை தீவிரப்படுத்திய இந்திய அணிக்கு ஷிலானந்த் 5வது கோல் அடித்தார்.

கடைசி கட்டத்தில் கடுமையாகப் போராடிய ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீபன்ஸ் மேலும் 2 கோல் போட்டு (59வது, 60வது நிமிடம்) நம்பிக்கை அளித்தார். மேற்கொண்டு கோல் ஏதும் விழாததால், இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனை வீழ்த்தியது. தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்த இந்தியா 12 புள்ளிகளுடன் முதலிடம் வகிப்பதுடன் 5வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED அதிகபட்ச ரன் குவித்து ஆஸ்திரேலியாவை...