தம்பியின் நினைவால் வாடுகிறேன்... ‘தமிழ் தலைவாஸ்’ பிரதாப் நெகிழ்ச்சி

புரோ கபடி 6வது சீசனில் விளையாடும் தமிழ் தலைவாஸ் அணியில் 5 தமிழக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அதில் இருவர் கடந்த சீசனிலும் களம் கண்டவர்கள். ஒருவர் பிரதாப். புதுச்சேரி, கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர். இம்முறை பிரேம் பிரதாப் என்ற பெயரில் களம் காண்கிறார். அவரது சீருடையிலும் பிரேம் பிரதாப் என்றே அச்சிடப்பட்டுள்ளது. இந்த திடீர் பெயர் மாற்றத்திற்கான காரணம் நெகிழ வைக்கிறது. தேவநாதன்-பிரேமா தம்பதியரின் மூத்த மகன் பிரதாப் (22). பிரேம்குமார், 11ம் வகுப்பு படிக்கும் ராஜ் என 2 தம்பிகள். பிரதாப் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் படிக்கிறார். எலக்ட்ரிஷியனாக பணிபுரிந்த தேவநாதன் நோய் பாதிப்பால் 2011ம் ஆண்டு திடீரென இறக்க, நிலைகுலைந்தது குடும்பம். அத்தை காவேரியும், மாமா தமிழரசனும் குடும்பத்தை தாங்கினர். அம்மா பிரேமாவும் கூலி வேலைக்கு போனார். பிள்ளைகளும் குடும்ப நிலை உணர்ந்து ஒத்துழைத்தனர். அதிலும் பிரதாப் தம்பி பிரேம்குமார் மாற்றுத்திறனாளி. சக்கர நாற்காலி வாழ்க்கை. சிறுவயது முதலே பிரேமின் தேவைகளை கவனித்து வந்தது பிரதாப் தான்.

அண்ணண் கபடி விளையாடுவதை பார்ப்பதிலும், உற்சாகக் குரல் கொடுப்பதிலும் பிரேமுக்கு அலாதி ஆர்வம். வீட்டில் யாராவது பிரதாப்புக்கு வேலை சொன்னாலும், ‘அண்ணா விளையாடப் போகட்டும்.... தொந்தரவு பண்ணாதீங்க’ என்று ஆதரவாக இருப்பானாம். கபடியில் இந்த நிலையை எட்ட எனது பயிற்சியாளர் முத்துகிருஷணன் சிறந்த பயிற்சியும், ஜவகர் அண்ணனின் உதவியும், பிரேமின் கபடி ஆர்வமும்தான் முக்கிய காரணங்கள் என்கிறார் பிரதாப்.
தம்பி மீது இருக்கும் அன்பின் காரணமாக தனது பேஸ்புக், டிவிட்டர் என எல்லா இடங்களிலும் தனது பெயருடன் தம்பியின் பெயரையும் சேர்த்தே குறிப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் 6 மாதங்களுக்கு முன்பு சுவாசக் கோளாறு காரணமாக பிரமே–்குமார் (18) இறந்துவிட்டார். விவரம் தெரியாத வயதில் அப்பா இறந்த அதிர்ச்சியை விட தம்பியின் மறைவு பிரதாப்பை நிலைகுலைய வைத்துவிட்டது. ஆனாலும் தம்பியின் கபடி கனவை நனவாக்க பிரதாப் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். கூடவே தன் ஆசைத்தம்பியின் பெயரையும் சேர்த்து பிரேம் பிரதாப் ஆக மாறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பெண்ணை திட்டிய அண்ணன், தம்பி கைது