பூ ஒன்று தொழிலானது!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகரிலிருந்து சரியாக 25 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது பஹுண்டி என்கிற கிராமம். இந்த கிராமமே 24 மணி நேரமும் பூ நறுமணத்தால் பூரித்துக் கொண்டிருக்கிறது. காரணம், அங்கிருக்கும் ‘ஹெல்ப் அஸ் க்ரீன்’ என்று பெயர் சூட்டப்பட்ட கட்டிடம். இங்கே தினமும் ஏராளமாக பூக்கள் சேகரிக்கப்பட்டு, அதிலிருந்து ஊதுபத்தி, சாம்பிராணி மற்றும் உரம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. நண்பர்களான அங்கித் அகர்வால் மற்றும் கரண் ரஸ்தோகி என்கிற இரு இளைஞர்கள்தான் பூவை வைத்து கவிதை எழுதி காலத்தை வீணாக்காமல், அதை ஒரு வெற்றிகரமான தொழிலாக மாற்றியிருக்கிறார்கள்.

அங்கித் அகர்வாலிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். “என்னோட சொந்த ஊர் புனே. நான் காலேஜ் வரைக்கும் அங்கேதான் படிச்சேன். ஐடி என்ஜினியரிங் முடிச்சிட்டு புதிய கண்டுபிடிப்பு மற்றும் சுயதொழில் தொடர்பான முதுநிலைப் படிப்பும் படிச்சேன். ஒரு ஐடி நிறுவனத்தில்தான் வேலை. செக்குமாடு மாதிரி சுத்திக்கிட்டே இருக்கிற இந்த வேலை கொஞ்சம் போரடிச்சது. லைஃபுன்னா அட்வெஞ்சர் வேணும்னு நெனைச்சேன். சொந்தத் தொழில் தொடங்கினாதான் சவால் இருக்கும். அதுக்குன்னு திடீர்னு வேலையை விட்டுட்டு, பெரிய முதலீடு போட்டு தொழில் தொடங்கக்கூடிய சூழலும் எனக்கு இல்லை. எனக்கான நேரத்துக்காக நான் காத்துக்கிட்டு இருந்தேன்.”

“கரண், உங்களோட எப்படி சேர்ந்தார்?” “அவனும், நானும் சின்ன வயசுலே இருந்தே நெருங்கிய நண்பர்கள். ஒண்ணாதான் டியூஷன் படிச்சோம். அப்போ ஏற்பட்ட நட்பு, இப்போ தொழில் வரை தொடர்ந்துக்கிட்டு இருக்கு. எங்க ரெண்டு பேருக்குமே எப்போதும் சுற்றுச்சூழல் மீது அக்கறை உண்டு. அதுக்கு ஏதாவது செய்யணும்னு பேசிக்கிட்டு இருப்போம். கரண் படிப்பு முடிச்சிட்டு காலநிலை மாற்றம் மற்றும் கார்பன் பாதிப்புகள் குறித்து ஆய்வுக் கட்டுரை எழுதினார்.  நானோ வாகன டயர்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தேன். சுற்றுச்சூழல் குறித்து 13 ஆய்வு கட்டுரைகளை எழுதி இருக்கேன்.

இப்படி எங்களுக்குள் சுற்றுச்சூழல் ஒரு கொள்கையாக ஊறிப்போய் இருந்த சமயத்தில்தான், ஒரு நாள் நானும் கரணும் கங்கை கரை ஓரமா அமர்ந்து பேசிக்கிட்டு இருந்தோம். கங்கை புனிதமான நதின்னு சொல்றோம். ஆனா அதை எவ்வளவு மாசு படுத்தி இருக்காங்கன்னு நேர்லே பார்த்தாதான் தெரியும். புனிதம்ன்னு சொல்லி சொல்லியே கங்கையில் எல்லா குப்பையையும் கொட்டுவது வழக்கமாயிடுச்சு. கான்பூரில் உள்ள கோயில்கள், மசூதிகள் மற்றும் குருத்வார்களில் இருந்து மட்டும் வருடத்துக்கு பல லட்ச டன் பூக்களை கங்கையில் கொட்டுவது வழக்கம். கோயில் பூக்களை குப்பையில் கொட்டக்கூடாது அதற்கு பதில் ஆற்றில் கொட்டலாம் என்பது அவர்களது வாதம்.

ஆற்றில் கொட்டுவதால், அதில் உள்ள உயிரினங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது பலருக்கு தெரிவதில்லை. தண்ணீர் மாசு அடைவது மட்டும் இல்லாமல், நீர்வாழ் உயிரினங்கள் எல்லாம்  இறந்துவிடும் அபாயம் உள்ளது. இது எங்களுக்கு தெரியும். ஆனால் மக்களுக்கு இதனை புரிய வைக்க முடியுமா? முயற்சி செய்தால் கண்டிப்பா செயல்படுத்த முடியும்ன்னு தோணுச்சு. பூக்கள் நதியில் கொட்டுவதற்காக அல்ல, அதை வெச்சு தொழில் பண்ணலாம்னு தோணுச்சி. ரெண்டு பேரும் சேர்ந்து செய்யலாம்னு பேசினோம்.” “எப்படி ஆரம்பிச்சீங்க?”‘‘என் அம்மாகிட்ட சொன்ன போது, ‘என்ன, லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குற வேலையை விட்டுட்டு குப்பையில் இருக்கும் பூவை சேகரிக்க போறியா’ன்னு கோபமா கேட்டாங்க.

கரண் வீட்டிலும் அதெல்லாம் வேணாம்ன்னு சொன்னாங்க. ஆனா, நாங்கதான் தீவிரமா இருந்தோம். என்னதான் பூவாக இருந்தாலும், அது குப்பை தான். குப்பையில் இருந்து மண்புழு உரம் தயாரிக்கலாம். பூவில் இருந்து ஏன் தயாரிக்க முடியாதுன்னு தோணுச்சு. கையில் இருந்த எழுபத்தி ரெண்டு ஆயிரத்தை முதலாக போட்டுத் துவங்கினோம். நிறுவனம் துவங்கியதும் முதலில் அதற்கான ஆய்வில் ஈடுபட்டோம். நாங்க இருவருமே சுற்றுப்புறச்சூழல் மேல் ஈடுபாடு கொண்டவர்கள் தான். ஆனால், முறையான ஆய்வாளர்கள் கிடையாது. தாவிரவியல் பேராசிரியர்கள், விவசாயிகள், உரம் தயாரிப்பவர்கள், பூ விற்பனையாளர்கள், கோயில் நிர்வாகிகள்ன்னு ஒருத்தரையும் விட்டு வைக்கல. எல்லாரிடமும் பேசினோம்.

அதே போல பூக்களை எப்படி மக்க செய்வது, அதில் இருந்து மண்புழு உரம் தயாரிப்பதுன்னு யோசிச்சோம். ஆடு, மாடு, குதிரைன்னு எல்லாவற்றின் சாணத்தையும் பயன்படுத்தி பார்த்தோம். ஆறு மாசம், ஏகப்பட்ட ஆய்வு. கடைசியாக காபி பொடி சேர்த்துப் பார்த்தோம். அதில் தான் நாங்க நினைச்சப்படி மண்புழு உரம் தயாராச்சு. எந்த ஒரு ரசாயனமும் கலக்கப்படாத முழுக்க முழுக்க ஆர்கானிக் உரம். ‘மிட்டி’ (மண்) ன்னு பெயர் வச்சோம்.”“ஊதுபத்தி, சாம்பிராணியெல்லாம் பிற்பாடு சேர்ந்ததா?”‘‘உரத்தோடு நிக்கல. அடுத்து என்ன செய்யலாம்ன்னு யோசிச்சோம். பூக்களுக்கு நறுமணத்துக்கு ஏற்ப ஏதாவது செய்யலாம்ன்னு கரண் சொன்னான்.

ரோஜா மல்லிகைன்னு நறுமண திரவியங்கள் மார்க்கெட்டில் இருக்கு.அதை வேறு விதமாக பயன்படுத்த நினைச்சோம். ஊதுபத்தி, சாம்பிராணி தயாரிக்கலாம் பல்ப் எறிஞ்சது. அதற்கான ஆய்வில் இறங்கினோம். பொதுவாக ஊதுபத்தி மற்றும் சாம்பிராணிகள் நிலக்கரித் துண்டில்தான் தயாரிப்பாங்க. விரும்பி வடிவம் செய்து அதை நறுமண திரவியத்தில் முக்கி எடுத்து காயவைத்தால் ஊதுபத்தி சாம்பிராணி தயார். நிலக்கரிக்கு பதில் ஏன் பூக்களை பயன்படுத்தக்கூடாதுன்னு தோணுச்சு. சேகரிச்ச பூக்களை காயவச்சு பொடித்து, அதில் தேவையான நறுமணங்களை சேர்த்து ஊதுபத்தி மற்றும் சாம்பிராணிகளை தயாரிக்க ஆரம்பிச்சோம்.”

“குப்பையிலிருந்து மின்சாரம் எடுக்கலாம். நீங்க பூவை மட்டும் எப்படி பிரிச்சி எடுத்தீங்க?”‘‘குப்பைகளை அகற்றும் பொறுப்பு நகராட்சியை சார்ந்தது. அவங்க வேலையில் நாம் ஈடுபடுவது அவ்வளவு சுலபமில்லை. அதற்கு அவர்களிடம் நாம் முறையாக அனுமதி பெறணும். அதற்கு பதில் குப்பைக்கு வரும் முன் அந்த பூக்களை அதன் ஆதிமூலத்தில் இருந்தே சேகரிக்க நினைச்சோம். பெரும்பாலான பூக்கள் கோயில்களில் தான் அதிகம் கடவுளுக்கு சாத்தப்படுகிறது. அங்கிருந்துதான் குப்பை தொட்டிக்கு செல்கிறது. நேரடியாக கோயில் நிர்வாகிகளை அணுகினோம். கோயிலில் இருந்து பெறப்படும் பூக்களுக்கு நகராட்சியிடம் அனுமதி பெறவேண்டும் என்ற அவசியம் இல்லை.

கான்பூரை சுற்றியுள்ள கோயில் மற்றும் மசூதிகளுக்குச் சென்று, அவர்களிடம் பூக்களை நாங்க எடுத்துக் கொள்வதாக கூறினோம். அவர்களுக்கும் வேலை மிச்சம் என்பதால் சரி என்றனர். ஒவ்வொரு கோயில் மற்றும் மசூதிகளில் நீலநிற குப்பைத் தொட்டியை வைச்சோம். அவங்க அதில் பயன்படுத்திய பூக்களை போட்டு வைப்பாங்க. தினமும் காலை எங்க நிறுவன வண்டி சென்று, பூக்களை சேகரிக்கும். பூக்களை ரக வாரியாக பிரிப்போம். பிறகு பூக்களை நாரில் இருந்து தனியாக பிரித்து அதன் இதழ்களை மட்டும் சேகரிப்போம். இதில் மிகவும் மக்கி இருக்கும் பூக்களை தனியாக எடுத்து அதை மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்திக் கொள்வோம் மற்ற பூக்கள் ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி தயாரிக்க.

தற்போது எங்கள் நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்க்கிறார்கள். எங்களின் நோக்கமே, பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என்பது தான். பூக்களை பிரிப்பது முதல் அதை ஊதுபத்தியாக மாற்றுவது வரை எல்லாமே இங்கு பெண்கள்தான்.” “எங்க தமிழ்நாட்டில் ‘தெர்மாக்கோல்’ ரொம்ப ஃபேமஸ். பூக்களிலிருந்து தெர்மாக்கோல் தயாரிக்க முடியுமா?”‘‘அதை வெச்சு அணையில் தேக்கி வைத்த நீர் ஆவியாகிறதை தடுக்கலாம்னு தமிழ்நாட்டில் கண்டுபிடிச்சிருக்காங்கன்னு நாங்களும் பேப்பரில் படிச்சோம் (சிரிக்கிறார்).

எங்களின் தொழில் பூக்கள் என்றாகிவிட்டது. அதனால் இதில் இருந்து என்னென்ன செய்ய முடியும்ன்னு யோசிப்பது தான் எங்க வேலையே. தெர்மாக்கோல், பேக்கேஜிங்  மெட்டீரியல் உலகம் முழுக்க பரவலான பயன்பாட்டில் இருக்கிறது. ஃப்ரிட்ஜ், டீவி, வாஷிங் மெஷின் எதுவாக இருந்தாலும் அதை தெர்மாக்கோல் கொண்டுதான் பேக் செய்வது வழக்கம். இது ஒரு ஸ்பாஞ்ஜ். பொருள் சேதமடையாமல் பாதுகாக்கும். மக்கிப் போகாது. அதற்கு மாற்று ‘புளோரா ஃபோம்’. பூக்கள் மூலமாக தயாரிக்கப்படும் தெர்மாக்கோல்தான் அது. இது எளிதாக மக்கும் என்பதால் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து இல்லை. புளோரா ஃபோமை பிரபலமாக்கும் எண்ணம் எங்களுக்கு இருக்கிறது.”

“அடுத்து?”‘‘ஊதுபத்தி, சாம்பிராணி கடவுளின் பொருள் என்பதால் சாம்பிராணி பாக்கெட்டில் சாமி படம் போட்டு இருந்தோம். சாமிப்படம் இருப்பதால் அதை குப்பைத்தொட்டியில் போட மக்கள் தயங்கினாங்க. அதையே விதை பாக்கெட்டாக மாத்தினால் என்னன்னு யோசிச்சோம். சாம்பிராணியை பயன்படுத்திட்டு பாக்கெட்டை மண்ணில் புதைச்சிடலாம். அதில் இருந்து ஒரு அழகான செடி முளைக்கும். அடுத்து லெதர் தயாரிக்கும் ஆய்வில் ஈடுபட்டு வறோம். கூடிய விரைவில் மக்கி போகும் லெதர் பொருட்கள் மற்றும் பைகளை அறிமுகம் செய்யும் எண்ணம் உள்ளது. தற்போது எங்களின் பொருட்கள் ஆன்லைனில் தான் கிடைக்கிறது. இன்னும் ஒரு மாதத்தில் எல்லா முக்கிய நகர சூப்பர் மார்க்கெட்டிலும் விற்பனை செய்ய இருக்கிறோம்.’’

- ப்ரியா

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: