கடனாநதி தோன்றிய வரலாறு

தாமிரபரணி நதியில் திருப்புடைமருதூரில்தான் கடனா நதி வந்து சேருகிறது. ராமநதி, ஜம்புநதியை சேர்த்துக் கொண்டு பாயும் கடனா நதியை தென்னக கங்கை என்றும் போற்றுவர். இதற்காக  கூறப்படும் புராண வரலாறு வருமாறு: ஒரு காலத்தில் தென்னக ஸ்தலங்களை தரிசிக்க அத்ரி மகரிஷியின் சீடர் பிருங்கி முனிவர் வந்துள்ளார். அவர் சிவன் மீது மிகுந்த பற்று கொண்டவர். சிவபெருமானை வணங்கி மாபெரும் தவத்தை மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அத்ரி மகரிஷி ஆசிரமத்தில் துவங்கியுள்ளார். பிருங்கி முனிவரின் கடுமையான தவத்தினை கண்டு மெச்சினார் சிவபிரான். எனவே அவர் தேவியுடன் ரிஷப வாகனத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்சி கொடுத்தார்.

சிவனை பார்த்த முனிவர் பக்தியின் உச்சத்திற்கு சென்று விட்டார். சிவனை மட்டும் வணங்கும் நிலையில், அவருக்கு அருகில் நின்ற அம்மையின் உருவம் கண்ணுக்கு தெரியவில்லை. ஆகவே பார்வதியை தவிர்த்து சிவனை மட்டும் வலம் வந்து நின்றார். இதனால் கோபமடைந்த பார்வதி வெளியேறி பல காத தூரம் தள்ளிப்போய் நின்றார். அருகில் பார்வதி தேவி நிற்காமல் தூரத்தில் நிற்பதை கண்ட சிவன் பார்வதியை தேற்றினார்.  ‘கல்யாணி வா’ என அன்பொழுக அழைத்தார். ஆனால் தேவியின் கோபம் தணியவில்லை. அவர் தாமிரபரணி நதிக்கரையில் போய் நின்று கொண்டார்.

உடனே சிவன்  தனது சடைமேல்  வைத்திருந்த கங்காதேவியை அழைத்து, ‘பார்வதி தேவியின் கோபத்தை தணித்து ஆறுதல் கூறி அழைத்து வா’ என அனுப்பி வைத்தார். கங்கா அங்கிருந்து கிளம்பினார். பார்வதி தேவியை அன்புடன் வலம் வந்து ஆறுதல்  கூறினார். ஆனாலும் கோபம் தணியவில்லை. இறைவன் கூறிய கட்டளையை நிறைவேற்றும் கடனை பெற்ற கங்கை, பார்வதி தேவியின் கோபத்தை தீர்க்க முடியவில்லை. அதாவது பார்வதி தேவி கோபம் தணியாத காரணத்தால் இன்றளவும் கங்கை அடைக்க முடியாத கடனை பெற்ற கடனா நதி என்ற பெயருடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதை கருணை நதி என்றும் கூறுவர். சக்தி இல்லையேல் சிவன் இல்லை. சிவனும், சக்தியும் பிரிந்தால் உயிர் இல்லை. அவர்களை சேர்க்கும் கருணையும் உயிர் வாழ வைக்க கருணையும் கொண்டு கங்கை நதியாக ஓடியதால் இதற்கு கருணை நதி என்றும் பெயர் பெற்றிருக்கிறது. கடனா நதி அத்ரி மலையில் தோன்றுகிறது. இத்தீர்த்தம் கங்கை தீர்த்தம், கடலால் ஆன நதி. அதாவது அத்ரி கங்கை, ஆகாய கங்கை அல்ல. கடல் கங்கை என்றும்  கூறுவர். அதுதான் கடலால் நதி என்று பெயர் பெற்று மருவி கடனா நதியாகி விட்டது என்பர். இந்த கடனா நதிதான் அத்ரி தபோவனத்தில் தோன்றி கல்லாற்றில் வந்து சேருகிறது.

கல்லாறு என்பதும் கடனா ஆறு என்பதும் ஒன்றே. கல்லாற்றில் கற்கள் சில சிவலிங்க ரூபத்தில் உள்ளது. இந்த சிவலிங்கத்தினை இங்கிருந்து எடுத்துச் சென்று  ஆவுடையில் பிரதிட்சை செய்து வணங்குபவர்கள் உண்டு. அதை மிக புண்ணியம் என்பார்கள். தாமிபரணி கரையில் உள்ள திருப்புடைமருதூர் என்ற புண்ணிய ஸ்தலம் மிக முக்கிய ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கும், அத்ரி மலையில் தோன்றிய கடனா நதிக்கும் ஒரு சம்பந்தம் உண்டு. சிவபெருமானின் பாத சேத்திரமாகவும், பஞ்ச குரோச ஸ்தலங்களில் ஒன்றாகவும் திருப்புடைமருதூர் விளங்குகிறது. இரட்டை சிறப்புகளை கொண்ட திருப்புடைமருதூரில் தைப்பூச திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றதாகும்.

இவ்விழாவின் பெருமைகளைப் பற்றி தாமிரபரணி மகாத்மியம் மற்றும் சிவசைல மகாத்மியம் போன்ற பழம்பெரும் புண்ணிய நூல்கள் சிறப்பாக கூறுகிறது.

அத்ரி முனிவர் சீடர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காவும் ஜனங்களின் சேமத்திற்காகவும் தன் கையில் உள்ள தண்டத்தால் பூமியை தட்டினார். அப்போது அங்கிருந்து ஒரு தீர்த்தம் வெளிப்பட்டது. அதற்கு அத்ரி தீர்த்தம் என்று தன் பெயர் வைத்தார்.  பின்னர் கங்கையை அழைத்தார். உடனே அங்கு வந்த கங்கையை தான் நிர்மாணித்த அத்ரி தீர்த்தத்துடன்  சேர்த்து கொண்டார். தை மாதம் பூச நட்சத்திரம் இணையும் நன்னாளில் அவர் இரு தீர்த்தங்களையும் சேர்த்து விட்டதால் அந்த தீர்த்தத்துக்கு கடனை என்று பெயர் வைத்தார்.

கடனா,  கடனை ஆகிய சொற்களுக்கு சேர்த்தல், சேர்ப்பித்தல், அணைத்தல் ஆகிய பெயர்கள் உண்டு. இவ்வாறு தோன்றிய கடனை அத்ரி முனிவரை, நோக்கி “நான் சமுத்திரம் செல்ல வேண்டும். இதுவே என் பல  கால ஆசையாக உள்ளது. இதை தாங்கள் தான் நிறைவேற்றி தரவேண்டும்” என்று வேண்டினாள். முனிவரும், “நீ கடனை என்ற பெயருடன் சமுத்திரம் சென்றடைவாயாக” என்று அனுமதி அளித்தார். அதன் பின் அந்த நதி பாய துவங்கியது. அதனால் பல இடங்கள் பெருமை பெற்றன. எப்படி?

(நதி வற்றாமல் பாயும்)

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: