ஆனை காத்த நயினார் கோயில் சிறப்புகள்

அத்தாளநல்லூர் கல்வெட்டுகளில் ‘ஆனைக் காத்தருள் செய்த பிரான்’ எனவும் கொல்லம் வருடம் 662ல் திருப்புடைமருதூர் கல்வெட்டில் இத்தலத்தை ‘ஆனைக் காத்த நயினார் கோவில்’ எனவும் குறிப்பிடுகிறார்கள். கிபி 7ம் நூற்றாண்டில் நம்மாழ்வார் எழுதிய பாடலில் மொய்மாம் பூம்பொழிற் பொய்கை முதலைச்  சிறைப்பட்டு நின்ற பொய்கை கைகாவுக்கருள் செய்த கார்முகில் போல வண்ணன்-கண்ணன் எழுந்தும் பறந்தும் துள்ளாதார் தம்மால் கருமம் ஏன்-? சொல்வீர் தண் கடல் வட்டத்துள்ளீரே.. என பாடியுள்ளார். கஜேந்திர மோட்ச தலங்கள் 22 இடங்களில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் வட இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் தேஸ்கார் என்னும் தலத்தில் உள்ள தசவதார கோவில் மிகவும் பழமையானது . இங்கு கஜேந்திர வரதர் விக்ரகம் வழிபடப்பட்டு வருகிறது. இது கி.மு 500 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டதாக (2500 ஆண்டு) தெரிகிறது. இதே போல் நமது தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவிலில் பல்லவ மன்னர் இரண்டாம் நந்திவர்மன் காலத்தில்  கஜேந்திரவரதர் விக்ரகம் நிறுவப்பட்டு வழிபடப்பட்டு வருகிறது.

ஆயினும் இதற்கெல்லாம் முற்பட்ட ஆதிமூலம் அத்தாளநல்லூர் தான் என்பது தெள்ளத் தெளிவாக உள்ளது.

விஜயநகர வேந்தன், கிருஷ்ணதேவராயர் இயற்றிய ‘அமுக்த மாலிதா’ என்னும் காவியத்தில் ஸ்ரீஆண்டாளுடைய முன்னோர்கள் ஆண்டாள் தன் வீட்டில் பிறந்து அவதாரம் புரிய வேண்டும் என ஆவல் கொண்டு அதை  நிறைவேற்ற அத்தாளநல்லூர் கஜேந்திரவரதன் திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் சுவாமியை வணங்கி நின்றதாக  குறிப்பிடுகிறார். மொய்மாம் பூம்பொழில், திருப்பதி ஆகிய இந்த கஜேந்திர மோட்ச தலத்திருக்கோவில் காலத்தில் மிகவும் பழமையான திருக்கோவில் ஆகும். கோவிலின் அமைப்பும், கலை அம்சங்களையும் ஆராயும் போது பழைய கோவில் எனப்படும் பரமபத நாதர் கோவில் முற்கால பாண்டிய மன்னர்களால் 7 ஆம் நூற்றாண்டில் முழுமையான கல் கோபுரத்தால் கட்டப்பட்ட கலைக்கோவிலாக தென்படுகிறது.

இந்த கோவிலில் ஆதிமூலமும் நின்ற கோலத்திலும், தேவியர் இருபுறமும் முன்பே பிருகு முனிவர், மார்க்கண்டேயரும் அமர்ந்திருப்பது போல் உள்ளது.

ஸ்ரீபரமபதநாதன் கோவில் 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்கு தான் பழைய கோவில் இருந்துள்ளது. அந்த கோவில் கர்ப்ப கிரகத்தில் மூலவர் தற்சமயமும் உள்ளார். அதில் கல் சுதை வர்ணம் என்ற கலை மூலம் மூலவர்  உருவாக்கப்பட்டுள்ளார். கல்லால் செய்யப்பட்ட மூலவர் சிலை மூலிகை மூலம் தயார் செய்யப்பட்டு பின் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. இதே போல் தான் 16&ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புதிய கோவில் மூலவரும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் இந்த கல்களை வர்ணம் செய்ய இயலாத காரணத்தால் மூலவர் தற்சமயம் உள்ளது போல் முலாம் பூசியிருக்கிறார்கள். அவர் நின்ற கோலத்தில் தேவியரோடு காணப்படுவது மிகவும் சிறப்பு அம்சமாகும். இக்கோயில் கருவறை முன்பு உற்சவரை நீராட்டும் வண்ணம் பூ பலகை செய்யப்பட்டுள்ளது. உள்சுற்று பிரகாரத்தில் தெற்கு நாச்சியாரும், வடக்கு நாச்சியாரும் மிகச் சிறப்பாக காணப்படுகிறார்கள். தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் வரும் போது பழைய கோவில் அடிக்கடி மூழ்கி இருக்க வேண்டும். ஆகவே புதிய கோவில் மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

16-ஆம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்ட கோவில் 08-01-1994ல் கும்பாபிஷேகம் செய்ய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் அப்போதைய அமைச்சர் வி.நடேசன் பால்ராஜ் முன்னிலையில் பிரியம்வதா பிர்லா அம்மையார் துவக்கி வைத்தார். அப்போது அறங்காவலர் குழு தலைவராக எம்.முருகையாவும், நிர்வாக அதிகாரியாக நா.பாலசுப்பிரமணியனும் இருந்துள்ளனர். பின்பு மகாகும்பாபிஷேகம் 09,10-07-2001 அன்று நான்குநேரி ஸ்ரீமத் ஸ்ரீகலியன் வானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகளால் நடத்தப்பட்டுள்ளது. ஸ்தல புராணத்தில் கஜேந்திர மோட்சம் சம்பவம் நடந்ததை ஒரே தூணில் மிகச்சிறப்பாக செய்து வைத்துள்ளனர்.

அதில் கருட வாகனத்தில் விஷ்ணு  அமர்ந்து சக்கரத்தினை ஏவும் காட்சி மிக தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது. நரசிம்ம அவதாரத்தில் இரணியனை நரசிம்மர் சிறப்பு பிடி போட்டு குடலை உருவுவதையும் அவனுடைய படை வீரர்களை அடித்து நொறுக்குவதையும் சிற்பி மிக திறமையாக செதுக்கியுள்ளார். தற்சமயம் நடந்த திருப்பணிகளை பற்றி கூறிவிட்டோம். பழங்காலத்தில் என்ன நடந்தது என்பதை கூற வேண்டும் அல்லவா.

கி.பி.1160-ல் பாண்டிய மன்னன் முதல் வீரபாண்டியன் திருப்பணி செய்ததை ‘மாதலங்காத்த முதல் வீரபாண்டியர்’ எனக்கூறும் கல்வெட்டு மூலம் தெரிகிறது. அதன்பின்பு கி.பி.1250ல் நேரின்மை கொண்டான் சுந்தர பாண்டிய நரசிங்கதேவர் தீயிலே நின்று பொன்சேவை செய்ததாக கல்வெட்டு கூறுகிறது. தற்சமயம் உள்ள கோவில் கலை நுணுக்கங்கள் விஜய நகர மன்னனால் கட்டப்பட்டது. இதன் விமானத்தையும் மற்ற சிறிய உபகோவில்களையும் பாண்டிய மன்னன் திருப்பணி செய்துள்ளார். நாயக்கர் கலை சிறப்பு பரமபதநாதர் கோவில் முன் மண்டபத்தில் மிளிர்கிறது. இங்குள்ள தீர்த்தங்கள் ஒவ்வொன்றும் சிறப்பு பெற்றவை. அது....

(நதி வற்றாமல் ஓடும்)

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: