×

சொன்னதை செய்தாரா உங்கள் எம்.பி?

சங்க காலத்தில் வணிகத்தில் சிறந்து விளங்கிய நகரம் கருவூர் என்ற கரூர். இங்கு கிடைத்த பழங்கால நாணயங்கள், சோழர்கள் ஆண்டதற்கு சான்றாக விளங்குகின்றன. தொன்றுதொட்டு விவசாயம், ஜவுளி, கொசுவலை, பேருந்து கூண்டு  கட்டுதல் போன்ற தொழில்கள் இங்கு பிரதானமாக விளங்குகின்றன. 4 மாவட்டங்கள், 6 சட்டப்பேரவை தொகுதிகள் என்று பரந்து விரிந்தது கரூர் மக்களவை தொகுதி. மொத்தம் 13 லட்சத்து 39 ஆயிரம் வாக்காளர்கள் கொண்ட இந்த தொகுதியில் ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் 25,783 அதிகம் உள்ளனர். ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இருந்து பிரிந்து 1995ல் கரூர்  தனி மாவட்டமானது. கரூர் நாடாளுமன்ற தொகுதி, 1991 தேர்தலுக்கு முன்பு வரை திருச்சி மாவட்டத்துடன் இருந்தது.  1996க்கு பிறகு கரூர் மாவட்டம் தனியாக நிர்வாக அலுவலக கட்டமைப்புடன்  செயல்படுகிறது. தொகுதி சீரமைப்புக்குப்பின் தற்போது கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), திருச்சி மாவட்டம் மணப்பாறை, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. குளித்தலை பெரம்பலூர் தொகுதிக்கு போய்விட்டது.

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் வெளியூரை சேர்ந்தவர்கள் தான் அதிக  தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். 1980ம் ஆண்டு மணப்பாறையை சேர்ந்த  துரை.செபஸ்தியான், 1984ல் முருகையா ஆகியோர் காங்கிரஸ் சார்பில் வெற்றி  பெற்றனர். 1989ல் தம்பிதுரை, 1991ல் முருகேசன் ஆகியோர் அதிமுக சார்பில் வெற்றி  பெற்றனர். வெளியூர்காரர்களே வெற்றி பெற்று வந்த நிலையில் 1996ம் ஆண்டு தேர்தலில் கரூர்காரரான நாட்ராயன்  தமாகா சார்பில் திமுக கூட்டணியில் வெற்றி பெற்றார். மத்தியில் ஆட்சி  மாற்றத்தையடுத்து 1998ல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் தம்பிதுரை  (அதிமுக) வெற்றி பெற்றார். பின்னர், வாஜ்பாய் ஆட்சி கவிழ்க்கப்பட்டது, 1999ல் சின்னசாமி அதிமுக சார்பிலும், 2004ல் கே.சி.பழனிசாமி திமுக சார்பிலும் வென்றனர். அடுத்து 2009, 2014 என தொடர்ச்சியாக மீண்டும் தம்பிதுரை வெற்றி பெற்று தற்போது மக்களவை துணை சபாநாயகராக இருக்கிறார்.
கரூர் தொகுதி அதிக முறை அதிமுக வசமே இருந்தபோதிலும் தொகுதி பிரச்னைகள் என்னவோ அப்படியேதான் உள்ளது. காவிரி, அமராவதி பாயும் பகுதி என்பதால் விவசாயிகளும் அதிகம். ஆனால், பாசன வசதி குறைவால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டாலும், கரூர் தொகுதியில் விவசாயம் எப்போதும் கேள்விக்குறிதான். அதேபோல் குடிநீர் பஞ்சமும் தொகுதி முழுக்க தலைவிரித்தாடுகிறது. தொகுதியின் எம்.பியான தம்பிதுரை எங்கு ெசன்றாலும் அவரை வரவேற்பது காலி குடங்களுடன் முற்றுகையிடும் பெண்கள்தான்.

ஜவுளி தொழிலுக்கு மூலாதாரமாக விளங்குகின்ற சாயப்பட்டறை தொழில் முடங்கி விட்டது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பு, வெளிநாட்டு ஆர்டர் கணிசமாக கிடைத்தும் அதனை நிறைவேற்ற முடியாத நிலைமை, ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில்  கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை தொடர்ந்து பலகோடி முதலீடு செய்து தொழிலை நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  தொழில்முனைவோர் ஒன்று சேர்ந்து சாயப்பூங்கா அமைக்க நிலம் வாங்கிய போது  மக்கள் எதிர்ப்பை காரணம் காட்டி அரசு அதை நிராகரித்தது. இதுவரை திட்டம் கிடப்பில் கிடக்கிறது. உற்பத்தியாகும்  கொசுவலைகளுக்கு சந்தை வாய்ப்பு இல்லை. கரூர் தவிர பிறதொகுதிகளில்  வறட்சி, வேலையின்மையை போக்க புதிய தொழிற்சாலைகளே இல்லை. சேலம் புதிய  அகலப்பாதையில் போதுமான ரயில்கள் இயக்கப்படவில்லை. மண்மங்கலம்  தேசியநெடுஞ்சாலையில் குகைவழிப்பாதை, பசுபதிபாளையம்,  பெரியகுளத்துப்பாளையத்தில் குகைவழிப்பாதை அமைக்காதது போன்றவை  நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்.

சொத்து மதிப்பு அதிகரிப்பு
கடந்த 2004ம் ஆண்டு தேர்தலின் போது தான் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விபரத்தை வேட்புமனுவில் தெரிவிக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டது. அப்போது கரூர் நாடாளுமன்ற தேர்தலில் தம்பிதுரை போட்டியிடவில்லை. திமுக வேட்பாளர் கே.சி. பழனிசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து 2009ல் நடந்த தேர்தலின் போதுஅதிமுக வேட்பாளராக தம்பிதுரை  போட்டியிட்டார். வேட்பு மனுதாக்கல் செய்த போது அந்த படிவத்தில் தனக்கு ரூ9 கோடியே 37 லட்சத்து 50,227 சொத்து மதிப்பு இருப்பதாக காட்டியுள்ளார். அடுத்து நடந்த 2014 தேர்தலின் போது மீண்டும் அதிமுக வேட்பாளராக தம்பிதுரையே போட்டியிட்டார். அப்போது அவர் வேட்பு மனுதாக்கலின் போது படிவத்தில் ரூ13 கோடியே 24லட்சத்து 57,262 என குறிப்பிட்டிருந்தார். கடந்த தேர்தலை விட ரூ4 கோடி சொத்து அதிகரித்துள்ளது.


தம்பிதுரை குடும்பம்....
தம்பிதுரை பிஎச்டி பட்டம் பெற்றுள்ளார். பிறந்த தேதி 15.03.1947. பிறந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பஞ்சாயத்துக்குட்பட்ட சிந்தகம்பள்ளி கிராமம். தந்தை முனிசாமி கவுண்டர். தாய் கமலம்மாள்.  மனைவி பானுமதி (மருத்துவர்). 2 மகள். தொழில்: விவசாயம்.

என்ன சொல்கிறார் தம்பிதுரை
கரூர் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியில் செய்யப்பட்ட திட்டங்கள் என்ன?  தேர்தல் நேரத்தில் நிறைவேற்றிய வாக்குறுதிகள் என்ன? எம்பி நிதியில்  செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் என்னென்ன? அதனுடைய திட்ட செலவு மொத்த தொகை  எவ்வளவு? என்பது போன்ற கேள்விகளுடன் தம்பி்துரையை அணுகிய போது, ‘‘கரூர்  நாடாளுமன்றம், 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒன்றியம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். நேரடியாக வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்தும்,  மக்களிடம் குறைகளையும், கருத்துக்களையும் தற்போது அதிகாரிகளுடன் நேரில்  சென்று கேட்டு வருகிறேன். சுற்றுப்பயணம் முழுமையாக முடியவில்லை. முடிந்த  பின்னர் தான் அதுபற்றி என்னால் விரிவாக கூறமுடியும். அப்போது நான் என்னென்ன செய்துள்ளேன் என்ற புள்ளி விபரங்களுடன் தகவல்களை தருகிறேன்’’ என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

கடைமடைக்கு வராத காவிரி நீர்...
காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நலசங்க துணைசெயலாளர் கவுண்டம்பட்டி சுப்பிரமணியம்: கட்டளைமேட்டு  வாய்க்கால் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வடிவமைக்கப்பட்டது.  கிருஷ்ணராயபுரம் தொகுதியில் தொடங்கி கடைமடை வரை பாசனத்திற்கு விநாடிக்கு 411 கனஅடிநீர்  நீர் தேவை. நச்சலுாருக்கு கீழ் உள்ள கடைமடை பகுதிகளான கவுண்டம்பட்டி,  சூரியனுார்,மேலப்பட்டி, முதலைப்பட்டி, திருச்சி மாவட்டம் எட்டரை, கோப்பு  உள்ளிட்ட 10ஆயிரம் ஏக்கர் சாகுபடிக்கு 3 முறை மேட்டூர் நிரம்பியும் தூர்வாராததால் நீர்வரவில்லை என்றார்.

தத்தெடுத்த ஊராட்சி குடிநீர் இன்றி தவிப்பு
தம்பிதுரை கரூர் மாவட்டம் பாலவிடுதி ஊராட்சி சாந்துவார்பட்டி கிராமத்தை தத்து கிராமமாக தேர்வு செய்தார். ஒரே மாதத்தில் குடிநீர் பிரச்சனை தீரும் என்றார். ஆனால் இதுவரை குடத்தை தூக்கிக் கொண்டு அலைந்து கொண்டிருப்பதாக கிராம மக்கள்  வேதனை தெரிவித்தனர். 22 மாவட்டங்களுக்கு கூட்டு குடிநீர் காவிரியில்  இருந்து போகிறது. ராமநாதபுரத்துக்கே திமுக ஆட்சியில் தண்ணீர் கொண்டு செல்ல திட்டம் கொண்டு வந்து போய் கொண்டிருக்கிறது. எங்கள் ஊர் மட்டுமில்லை, இந்த ஊராட்சியில் உள்ள அத்தனை கிராமங்களுக்கும் தற்போது இதுதான் நிலைமை. பலமுறை  எம்பியிடம் முறையிட்டும் எதுவும் நடக்கவில்லை என்றனர் வேதனையுடன்.

அதிகாரம் இருந்தும்...
ரத்தினவேல் (கோயம்பள்ளி அமராவதி கடைமடை பகுதி விவசாயிகள் நல உரிமச்சங்க தலைவர்):  கரூர் மாவட்டத்திற்கு அமராவதி நீர் உரிமை தொடர்ந்து மறுக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்திற்கே நீர் திறக்கப்படுகிறது. நடப்பாண்டில் மூன்று முறை அணை நிரம்பியும் எங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. அமராவதி பள்ளபாளையம் முதல் கோயம்பள்ளி வரை 44கிமீ துாரம் உள்ள வாய்க்காலை முக்கிய பிரமுகர்கள் சிபாரிசு செய்யும் இடத்தில் மட்டும் துார் வாருகின்றனர். துார்வாரியதற்கான நிதி செலவாகி உள்ளது. ஆனால் தண்ணீர்வரவில்லை. முழுமையாக செய்யாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக  துார்வாரி உள்ளனர். அமராவதி ஆற்றின் குறுக்கே ரூ13 கோடி மதிப்பில்  கோயம்பள்ளி- மேலப்பாளையம் உயர் மட்டப்பாலம் கட்டினர். 3 ஆண்டாகியும்  பயன்பாட்டிற்கு வரவில்லை. இருபுறமும் அணுகுசாலை அமைக்காமல் விட்டனர். பாலத் தின்கீழ் பகுதியில் மணல் எடுக்கின்றனர். பாலம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் அதிகாரம் இருந்தும் எம்.பி. சரிசெய்யாமல் இருக்கிறார், இனியாவது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

எம்பி நிதி என்னாச்சு?
மக்களவை  மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு தொகுதி வளர்ச்சி நிதியாக ஆண்டுக்கு  ரூ,5 கோடியை மத்திய அரசு நபார்டு வங்கி மூலமாக வழங்குகிறது. இந்த நிதியின்  கீழ் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த ஒவ்வொரு எம்.பி.யும் மாவட்ட  கலெக்டருக்கு பரிந்துரை செய்வார்கள். கலெக்டரின் உத்தரவின் பேரில்  சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திட்டப் பணிகளை மேற்கொள்வார்கள். இதன்படி பார்த்தால்  எம்.பி. தம்பிதுரையின் கரூர் தொகுதிக்கான ரூ25 கோடியில்  இதுவரை மத்திய அரசு ரூ20 கோடி வழங்கியதில் 84.74 சதவிகிதம்  மட்டுமே செலவு செய்துள்ளார். மீதி 4.97 கோடி செலவிடப்படவில்லை.

மொத்த வாக்காளர்கள்...
கரூரில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் கரூர் மாவட்டம் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, திருச்சி மாவட்டம் மணப்பாறை உள்ளடக்கியதாகும். இந்த 6 சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 13,39,075 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் மொத்தம் 6,56,617 பேரும், பெண் வாக்காளர்கள் மொத்தம் 6,82,400 பேரும் உள்ளனர். இதில் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் 58 பேர் உள்ளனர்.

நிறைவேற்றப்படாத திட்டங்கள்... கிடப்பில் கிடக்கும் நதிகள் இணைப்புத்திட்டம்...
திமுக முன்னாள் எம்எல்ஏ காமராஜ் கூறுகையில், ‘‘காவிரி ஆற்றின் குறுக்கே மேட்டூர்  அணைக்கு அடுத்து பல தடுப்பணைகள் தாண்டி திருச்சி முக்கொம்பில் கதவணை உள்ளது. இந்நிலையில் 2006ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது முதல்வர் கருணாநிதியால் திட்டமிடப்பட்டு, மாயனுார் காவிரியாற்றின் குறுக்கே தேசிய நீர் மேம்பாட்டு முகமையின் நதிகள் இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ254கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டு தற்போது1.05 டிஎம்சி தண்ணீரை தேக்கி  வைக்கப்படுகிறது. இங்கிருந்து வெள்ளக்காலத்தில் உபரி நீரை அக்னியாறு- வெள்ளாறு- பாம்பாறு, மணி முத்தாறு, அக்னியாறு, அரியாறு, தெற்கு வெள்ளாறு, வைகை  குண்டாறு, ஆகிய  ஆறுகளுக்கு திருப்பிவிட நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு வாய்க்கால் வெட்டும் திட்டத்தை செயல்படுத்தாததால் தண்ணீர் வீணாகி கடலுக்குச் செல்கிறது.  இத்திட்டத்தை நிறைவேற்றி இருந்தால், ஒருவேளை முக்கொம்பு கொள்ளிடம் கதவணையே உடையாமல் தப்பியிருக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும்’’ என்றார்.

சாயக்கழிவால் விவசாயம் பாதிப்பு
ராமலிங்கம்: சாயக்கழிவுநீரால்  பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2003-2004ம் ஆண்டுக்கு மட்டும் இழப்பீடாக ₹6.36 கோடி வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதையும் தரவில்லை. அதன்பிறகு 2018ம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் இதுவரை எந்த இழப்பீடும் தரவில்லை. 5,000 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு தவிக்கிறோம். மணல் கொள்ளை நடக்கிறது. இதனால் குடிநீர் ஆதாரம் பறிக்கப்படுகிறது. இதுபற்றி போராட்டம் நடத்தியும் எம்.பி. தம்பிதுரை கண்டுக்கவில்லை.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Did you say your MP?
× RELATED சொல்லிட்டாங்க...