போக்குவரத்து கழகம் ரூ.50 லட்சம் வரிபாக்கி: கம்பம் நகராட்சி அலுவலகம் நோட்டீஸ்

கம்பம்: கடந்த 4 ஆண்டுகளாக நிரந்தர பணியாளர்களின் தொழில் வரியை கட்டாமல் ₹50 லட்சம் வரி பாக்கி வைத்துள்ள கம்பம் அரசு போக்குவரத்து கழகத்திற்கும், தலைமை  அலுவலகத்திற்கும் கம்பம் நகராட்சி அலுவலகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தேனி மாவட்டம் கம்பத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் பணிமனைகள் இரண்டு கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 700க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்கள்  உள்ளனர். இவர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு, தொழில் வரி கம்பம் நகராட்சி அலுவலகத்தில் கட்டப்பட்டு வந்தது.

ஆனால் 2015 முதல் தொழிலாளர்களிடம் பிடித்தம்  செய்த தொழில் வரியை கட்டவில்லை. கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை சுமார் ₹50 லட்சம் வரை வரி பாக்கி வைத்துள்ளனர். இதனையடுத்து நகராட்சி சார்பில் கம்பம் கிளைக்கும், மதுரையில்  உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்திற்கும் நிலுவைத்தொகையை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் விரைவில் நிலுவைத்தொகை செலுத்துவதாக  தெரிவித்தபடிதான் உள்ளனர். ஆனால் கட்டவில்லை. அரசு போக்குவரத்து கழகத்தால் நகராட்சிக்கு ₹50 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: