லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட வாகன ஆய்வாளர், உதவியாளருக்கு அக்.9ம் தேதி வரை காவல் நீட்டிப்பு: விழுப்புரம் ஊழல் தடுப்பு கோர்ட் உத்தரவு

விழுப்புரம்: லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு, உதவியாளர் செந்தில்குமார் ஆகியோருக்கு வரும் அக்டோபர் 9ம் தேதி வரை காவல் நீட்டிப்பு  செய்து விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரியா உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டம் செம்மண்டலம் தவுலத்நகரை சேர்ந்தவர் பாபு(55). இவர் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி  வந்தார். கூத்தக்குடியை சேர்ந்த ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் முத்துக்குமாரின் சுற்றுலா வேனுக்கு தகுதிசான்றிதழ் வழங்குவதற்கு ₹25 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது விழுப்புரம்  லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். உடந்தையாக இருந்த அவரது உதவியாளர் செந்தில்குமாரும் கைது செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து இருவரும் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். பாபுவின்  வங்கிக்கணக்குகளை முடக்கம் செய்தனர். வீட்டில் சோதனையிட்டபோது ₹30 லட்சம் ரொக்கப்பணம், 200 பவன் தங்க நகைகள், 15 கிலோ வெள்ளிபொருட்கள் சிக்கியது.

 மேலும் 21  வங்கிக்கணக்குகள், 6 வங்கி லாக்கர்களை முடக்கம் செய்து ஒவ்வொரு லாக்கர்களாக போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். 3 லாக்கர்களில் மட்டும் 11 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரு நாட்களுக்கு முன்பு மேலும் ஒரு லாக்கரில் சோதனையிட்டபோது அரை கிலோ தங்கம், ₹20  கோடிக்கு சொத்து வாங்கியதற்கான ஆவணங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இன்னும் இரண்டு வங்கி லாக்கர்களை திறந்து போலீசார் சோதனையிட உள்ளனர். இதனிடையே கடலூர் சிறையில் உள்ள பாபு, செந்தில்குமாரின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில்  நேற்றையதினம் கடலூர் சிறையிலிருந்து அவர்களை பாதுகாப்புடன் அழைத்துவந்து விழுப்புரம் ஊழல்தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத்தொடர்ந்து அவரது நீதிமன்ற காவலை வரும் அக்டோபர் 9ம் தேதி வரை நீட்டிப்பு செய்து நீதிதி பிரியா உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும்  அவர்களை கடலூர் சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: