தொடர்கிறது இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் மீன்களை பறித்து மீனவர்கள் விரட்டியடிப்பு: ராமேஸ்வரத்தில் கொந்தளிப்பு.

ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை, படகுகளில் இருந்த இறால் மீன்களையும் அள்ளி சென்ற சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே  கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அன்றிரவு நடுக்கடலில் சில மீனவர்கள் மீன்பிடித்து  கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீன் பிடிக்க விடாமல் தடுத்து மீனவர்களை விரட்டியடித்தனர். மேலும்  மீனவர்களின் படகுகளில் இருந்த இறால் மீன்களையும் அள்ளிச் சென்றனர்.இதனால் அச்சமடைந்த மீனவர்கள் வேறு பகுதிகளுக்கு சென்று மீன் பிடித்து நேற்று காலை கரை திரும்பினர். இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால், கடலுக்கு சென்ற மீனவர்கள்  அனைவரும் குறைவான மீன்களுடன் கரை திரும்பினர்.

கடந்த ஒரு மாதமாக இலங்கை கடற்படையின் 10க்கும் மேற்பட்ட ரோந்து கப்பல்கள், கடல் எல்லையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைக்கு பயந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் ராமேஸ்வரம் துறைமுக கடற்கரையில் இருந்து குறைந்த  எண்ணிக்கையிலான படகுகள் மட்டுமே கடலுக்கு சென்று வருகின்றன. அவர்களும் விரட்டியடிக்கப்படுவதால் ராமேஸ்வரம் மீனவர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘‘டீசல் விலை ஒரு பக்கம் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனை சமாளிக்கவே எங்களால் முடியாத நிலையில், இலங்கை கடற்படையினர் எங்களை மீன்  பிடிக்க விடாமல் அச்சுறுத்தி வருகின்றனர். நாங்கள் குறைந்தளவு மீன்களுடன் கரைக்கு வருவதால், அதிக நஷ்டம் ஏற்படுகிறது. இதனால்தான் பல மீனவர்கள் கடலுக்கு செல்லாமல்  உள்ளனர். இந்த பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் ஒரு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: