போதையில் ரகளை செய்த எஸ்.ஐ.யை தாக்கிய ஹோம்கார்டு கைது : உறவினர்கள் மறியல்

தண்டையார்பேட்டை: போதையில் ரகளையில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட சிறப்பு எஸ்.ஐயை தாக்கிய ஹோம்கார்டை போலீசார் கைது செய்தனர். அவரை தங்களிடம் காட்டக்கோரி அவரது உறவினர்கள் மண்ணெண்ணெய் கேனுடன் மறியலில் ஈடுபட்டதால் காசிமேட்டில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எழும்பூரை சேர்ந்தவர் ராஜசேகர் (55). காசிமேடு காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐயாக பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்ற ராஜசேகர் காசிமேடு, தாண்டவன் தெருவில் ரோந்து சென்றார். அப்போது அப்பகுதியில் ஆசாமி ஒருவர் போதையில் ரகளையில் ஈடுபட்டிருந்தார். இதையடுத்து ராஜசேகர் அந்த ஆசாமியை வீட்டுக்கு செல்லுமாறு கூறி உள்ளார். இதனால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த போதை ஆசாமி, ராஜசேகரை சரமாரியாக தாக்கி சட்டையை கிழித்து உள்ளார். இதில் ராஜசேகர் காயம் அடைந்தார். தகவலறிந்து சக போலீஸ்காரர்கள் விரைந்து காயம் அடைந்த ராஜசேகரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில், காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து போதை ஆசாமியை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அதில், காசிமேடு புதுமனை குப்பத்தை சேர்ந்த தனசேகர் (34) என்பதும் ஏற்கனவே காசிமேடு பகுதியில் ஹோம்கார்டாக வேலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் தனசேகரை நேற்று கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.

இதற்கிடையில், தனசேகரை தங்களிடம் காட்டக்கோரி அவரது உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் காசிமேடு எஸ்.என்.செட்டியில் மண்ணெண்ணெய் கேனுடன் நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காசிமேடு போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தனசேகரை அவர்களிடம் பேச வைத்தனர். இதையடுத்து, மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: