ராணுவம், விமானப்படை, எச்ஏஎல் ஊழியர்களுக்காக ரபேல் ஊழலில் நீதியை பெற்றே தீருவேன்: ராகுல் காந்தி உருக்கம்

புதுடெல்லி: ‘‘ராணுவ வீரர்கள், விமானப்படை அதிகாரிகள், இந்துஸ்தான் ஏரோநெட்டிக்ஸ் ஊழியர்களுக்காக ரபேல் போர் விமான ஊழலில் நீதியை பெற்றே தீருவேன்’’ என்று ராகுல்  காந்தி சூளுரைத்துள்ளார். ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாக மத்திய அரசு மீதும், பிரதமர் மோடி மீதும் காங்கிரஸ் தலைவர் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார். உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில்  சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் பேசுகையில், ‘‘ரபேல் ஒப்பந்தத்தில் இப்போதுதான் வேடிக்கை தொடங்கியுள்ளது. இதுதொடக்கம்தான். இனிமேல் விஷயங்கள் மேலும் சுவாரஸ்யமாகும்.  விஜய் மல்லையா, ரபேல் விமானம், லலித் மோடி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி ஆகிய விவகாரங்களில் மோடியின் பணியை நாங்கள் காட்டும் போது உங்களுக்கு மேலும் பல உண்மைகள்  தெரிய வரும். இவை அனைத்தும் திருட்டுதான். பிரதமர் மோடி பாதுகாவலர் கிடையாது, கொள்ளையர் என்பதை ஒவ்வொன்றாக வெளியே கொண்டுவருவோம்” என்றார்.நேற்று தனது டிவிட்டரில் அவர் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்தியாவுக்காக சேவை செய்த ஒவ்வொரு விமானப்படை அதிகாரிக்கும், வீரர்களுக்கும், இந்த  நாட்டிற்கான சேவையில் உயிர் நீத்த விமானப்படை பைலட் குடும்பத்திற்கும், இந்துஸ்தான் ஏரோநெட்டிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஒவ்வொரு ஊழியர்களுக்கும், உங்கள் வலி  எங்களுக்கு கேட்கிறது. உங்களின் வேதனையை நாங்கள் உணருகிறோம். உங்களை மரியாதைக் குறைவாக நடத்தி, உங்களிடம் இருந்து திருடியதற்காக நாங்கள் நீதியை பெற்றுத்  தருவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா நேற்று கூறியதாவது: காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரபேல் போர் விமான டெண்டர் 2007 ஆகஸ்டில் வெளியிடப்பட்டது. 2012 டிசம்பர் 12ல் இது திறக்கப்பட்டது. 2014 மார்ச் 13ல் இதற்கான உள்நாட்டு ஒப்பந்தம்  இந்துஸ்தான் ஏரோநெட்டிக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் டசால்ட் நிறுவன சிஇஓ எரிக் டிராப்பியர் மற்றும் இந்துஸ்தான் ஏரோநெட்டிக்ஸ் நிறுவனத்தின்  முன்னாள் தலைவர் டி.எஸ். ராஜூ ஆகியோர் கையெழுத்திட்டனர். அலிபாபாவும் 40 திருடர்களும் பற்றிய கதையை இந்த நாடு கேட்டு இருக்கிறது. இப்போது மோடி பாபாவும், அவருடைய 40  சகாக்களும் எப்போது பதில் சொல்வார்கள் என்று இந்த நாடு கேட்கிறது. மோடி, அம்பானிக்கு பிரதமரா அல்லது இந்த நாட்டிற்கு பிரதமரா? இவ்வாறு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: