மூதாதையருக்கு திதி கொடுக்கும் நாளில் கொலை, கொள்ளை வேண்டாம் பிளீஸ்: குற்றவாளிகளுக்கு கைகூப்பி பீகார் துணை முதல்வர் வேண்டுகோள்

பாட்னா: பித்ரு பக்‌ஷா எனப்படும் மூதாதையர்களுக்கு திதி கொடுக்கும் நாட்களில் குற்றச்செயல் செய்வதில் இருந்து விலகியிருங்கள் என கோரிக்கை விடுத்த பீகார் துணை முதல்வர் சுசில்  குமாருக்கு ஆர்ஜேடி கண்டனம் தெரிவித்துள்ளது. பீகாரில் கடந்த சில நாட்களாக குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 23ம் தேதி முசாபர்நகர் முன்னாள் மேயர் சமீர் குமார் சிங் மர்மநபர்களால் துப்பாக்கியால்  சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த 21ம் தேதி ஒப்பந்ததாரர் தேப்ராஜ் ஆலம் என்பவர் பட்டப்பகலில் பாட்னா அருகே கோட்வாலி காவல் நிலையம் அருகே துப்பாக்கியால்  சுட்டுக்கொல்லப்பட்டார்.  இந்நிலையில், பித்ருபக்‌ஷா நாட்களில் குற்றச்செயல் செய்யாதீர்கள் என குற்றவாளிகளுக்கு துணை முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். பீகாரில், இந்துக்களின் நாட்காட்டியில் பித்ரு  பக்‌ஷா எனப்படும் 16 நாட்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் இறந்த மூதாதையர்களுக்கு திதி கொடுப்பதுடன், அவர்களுக்கு கயாவில் ஓடும் பால்கு ஆற்றில் உணவு  படையலிட்டு வழிபடுவது வழக்கம். நிலாவை மையமாக கொண்டு நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி கடந்த 23ம் தேதி தொடங்கி வரும் அக்டோபர் 8ம் தேதி வரை சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி கயாவில் நடந்த  நிகழ்ச்சியில் பீகார் மாநில துணை முதல்வர் சுசில் குமார் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, `‘குற்றவாளிகளே உங்களை எனது இரு கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன். பித்ரு பக்‌ஷா  நாட்களில் மட்டுமாவது குற்றச்செயல்கள் செய்வதில் இருந்து விலகியிருங்கள். மற்ற நாட்களில் நீங்கள் வழக்கம்போல் நடந்து கொள்ளுங்கள்’’ என கோரிக்கை விடுத்தார். துணை முதல்வரின் இந்த கெஞ்சலுக்கு ஆர்ஜேடி கட்சியை சேர்ந்த சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக தேஜஸ்வி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:குற்றவாளிகளை இருகரம் கூப்பி துணைமுதல்வர் சுசில்மோடி கெஞ்சியிருப்பது வெட்கக்கேடானது. பித்ருபக்‌ஷா நாட்களில் குற்றச்செயல்களில் இருந்து விலகியிருங்கள் என  கூறியது அவர்களது ஆட்சியின் நிகழ்வை பிரதிபலிக்கிறது. மற்ற நாட்களில் கொள்ளை, கொலை, கடத்தலை தொடருங்கள் என கூறுகிறாரே இது அவர்களது காட்டாட்சியை  தெளிவுபடுத்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: