மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: மகாராஷ்டிராவின் வார்தா மாவட்டத்தில் நடக்கிறது

மும்பை: மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்டோபர் 2ம் தேதியன்று மகாராஷ்டிராவின் வார்தா  மாவட்டத்தில் காந்தி ஆசிரமம் அமைந்துள்ள சேவாகிராம் கிராமத்தில் நடைபெறுகிறது.மகாத்மா காந்தியின் பிறந்த நாள் வரும் அக்.2ம் தேதி வருகிறது. இது அவரது 150வது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி, அன்றைய தினம் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டம், மகாராஷ்டிரா மாநிலம் வார்தா மாவட்டத்தில் நடக்க உள்ளது. அங்குள்ள சேவாகிராமத்தில் காந்தி ஆசிரமம் உள்ளது. இங்கு இந்த செயற்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகளில் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் அசோக் கெலாட் ஆகியோர் நேற்று முன்தினம் சேவாகிராமுக்கு சென்று செயற்குழு கூட்டத்துக்கு  செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டனர்.

அசோக் கெலாட் கூறுகையில், ‘‘நமது நாட்டுக்கு காந்திஜி அளித்த தத்துவங்கள் இப்போதும் தேவைப்படுகிறது. காந்திஜி வகுத்து கொடுத்த பாதையில்தான் காங்கிரஸ் கட்சி பயணம் செய்து  வருகிறது. பாசிசவாதிகளுக்கு எதிரான எங்களது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த சேவாகிராமில் நடைபெற இருக்கும் செயற்குழு கூட்டம் எங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும்’’  என்றார்.வார்தா மாவட்டத்தில் உள்ள சேவாகிராமில் நடைபெறும் இந்த செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நாடு  முழுவதிலும் இருந்து மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். இந்த செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து ‘லோக் சம்பர்க் அபியான்’(பொதுமக்களை நேரிடையாக தொடர்பு கொள்ளுதல்) என்ற இயக்கத்தை தொடங்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இந்த  இயக்கத்தின் கீழ் காங்கிரசார் தங்களுக்குட்பட்ட பகுதிகளில் வீடுவீடாக  சென்று பொதுமக்களை சந்தித்து பேசுவார்கள். மேலும் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை ஓராண்டு  முழுவதும் கொண்டாடவும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: