மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது சிசிடிவி கேமராவை ஆப் செய்ய சொன்ன அரசு அதிகாரி யார்?

* விசாரணை ஆணையத்தில் நிர்வாக அதிகாரி வாக்குமூலம்

* போயஸ் கார்டனில் நேரில் ஆய்வு செய்யவும் நீதிபதி முடிவு

சென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சிசிடிவி கேமராவை ஆப் செய்ய அரசு அதிகாரி ஒருவர் அப்போலோ பாதுகாப்பு அதிகாரியிடம்  தெரிவித்தார். அதன் பேரில் ஜெயலலிதா வார்டில் இருந்து வெளியே வரும் போது சிசிடிவி கேமரா ஆப் செய்யப்பட்டது என்று அப்போலோ நிர்வாக அதிகாரி விசாரணை ஆணையத்தில் அளித்த  வாக்குமூலத்தால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆணையத்தில் நேற்று காலை 10.30 மணியளவில் அப்போலோ  டாக்டர்கள் பத்மாவதி, வெங்கட்ராமன், புவனேஸ்வரி, அருள்செல்வன், முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் ஆகியோர் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் ஆஜராகினர். அவர்களிடம்  சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டி, தனித்தனியாக குறுக்கு விசாரணை நடத்தினார். இதை தொடர்ந்து அப்போலோ நிர்வாக அதிகாரியிடம் சுப்பையா விஸ்வநாதன் மறு விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் நீதிபதி ஆறுமுகச்சாமி விசாரணை நடத்தினார். சுமார் 1 மணி நேரம்  இந்த விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலத்தை நீதிபதி பதிவு செய்து கொண்டார். விசாரணைக்கு பிறகு  முன்னாள் எம்பி மனோஜ்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:

போயஸ்கார்டனில் ஜெயலலிதா கீழே விழுந்தார் என்பது இப்போது ஊர்ஜிதமாகியுள்ளது. போயஸ்கார்டனில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற போது, அங்கு சிசிடிவி கேமரா  பதிவுகள் ஏன் பெறப்படவில்லை என்று கேட்டிருக்கிறேன். மருத்துவமனையில் 27 கேமராக்கள் நீக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா பதிவு அழிக்கப்பட்டுள்ளது. அந்த சந்தேகம்  தொடர்ச்சியாக உள்ளது என்று தெரிவித்து இருக்கிறேன். கடந்த 2016 செப்டம்பர் 22ம் தேதி போயஸ் கார்டனில் ஜெயலலிதா கீழே விழுந்த போது, அந்த அறையில் சசிகலா,  இரண்டு பணி பெண்கள்  இருந்துள்ளனர். அந்த 2 பணி பெண்கள் ஏன் விசாரிக்கப்படவில்லை. எங்கே, அவர்கள் என்று கேட்டுள்ளேன்.

ஜெயலலிதாவால் பொறுப்பில் இருந்து என்னையும், என் தந்தை பி.எச்.பாண்டியன் விடுவிக்கப்பட்டது குறித்து குறுக்கு விசாரணையில் கேட்டனர். அதற்கு, நான் பதிலை ஆதாரமாக சொன்னேன்.  டிசம்பர் 2015ல் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் மீண்டும் அறிவிக்கும் போது எல்லோர் பெயர் வந்தது. என் தந்தை பெயர் பட்டியலில் வரவில்லை. அந்த பட்டியலில் திட்டமிட்டு  சசிகலாவால் எடுக்கப்பட்டது. என் தந்தையை ஜெயலலிதா கட்சியில் நீக்கவோ, விடுவிக்கவோ அறிவிப்பு வெளியிடவில்லை என்பதை எடுத்துரைக்கிறேன். ஜெயலலிதா மர்ம மரணத்தில்  இன்னும் அதிகமான சந்தேகங்கள் இருக்கிறது. ஜெயலலிதா பிபி 27 என்ற கேட்டகிரியில் இருக்கிறார். வீட்டில் இருந்து ஆம்புலன்ஸ் புறப்படும் போது கமாண்டோக்களை  மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்று சொன்னது யார் என்பதை எடுத்துரைத்து இருக்கிறேன். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் விசாரிப்பது குறித்து ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும். விசாரணை  ஆணையத்தில் சாட்சியங்கள் அளித்த வாக்குமூலங்கள் முரண்பாடாக தான் உள்ளது. விரைவில் நல்ல முடிவு வரும். சசிகலாவால் தான் இந்த மரணம் மர்மமாக உள்ளது என்று நாங்கள் கேள்வி எழுப்பியுள்ளோம். ஜெயலலிதாவிற்கு கீழ் பணியாற்றிய அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் நான் அளித்த  சாட்சியத்திற்கு முரணாக அளித்திருப்பதாக தெரிவித்தனர். அவர்களிடம் நான் சொன்னது. ஜெயலலிதாவின் ஆன்மா அவர்களை மன்னிக்காது என்று தெரிவித்துள்ளேன்.

சசிகலா யார் என்று தெரியாது என்று பலர் சாட்சியம் அளித்தனர். உண்மை நிலையை மறைத்துள்ளனர். செப்டம்பர் 22ம் தேதி நடந்த நிகழ்வுகளில் இருந்து, இறுதியாக டிசம்பர் 5ம் தேதி இறப்பு வரை  இன்னும் பல ஆதாரங்கள், சாட்சியங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. 2016 செப்டம்பர் 22ம் தேதி ஜெயலலிதா போயஸ் கார்டனில் இருந்து அப்போலோவிற்கு எடுத்து சென்றதற்கான சிசிடிவி  கேமரா பதிவு இல்லை. போயஸ் கார்டனில் அடுத்த இரண்டு நாட்கள் யார் வந்தார்கள், யார் சென்றார்கள் என்ற சிசிடிவி பதிவு இல்லை. செப்டம்பர் 22ம் தேதி ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது, எப்படி  விழுந்தார், யார் கொண்டு வந்தார்கள், உளவுத்துறைக்கும், காவல்துறைக்கும் ஏன் சொல்லவில்லை, சிசிடிவி கேமராவை அணைக்க சொன்னது யார், ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு ஏன்  சிகிச்சைக்கு அழைத்து செல்லவில்லை, என்ன சிகிச்சை அளித்தார்கள் என்று சொல்லவில்லை. இப்படி தொடர்ச்சியாக நடைபெற்ற அத்தனை நிகழ்வுகளில் உள்ள மர்மம் தான் என்னை போன்ற  தொண்டர்களுக்கு நீக்கப்பட வேண்டும்.

ஜெயலலிதா மரணத்தில் இன்றுவரை மர்மங்கள் நீங்கவில்லை. இன்று வரை அதற்கு விடையில்லை. பதிலும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறியதாவது:அப்போலோ நிர்வாக அதிகாரி சுப்பையா, அரசு அதிகாரி ஒருவர் சொன்னதின் பெயரில் தான் சிசிடிவி கேமரா ஆப் செய்யப்பட்டது என்று கூறினார். ஜெயலலிதா ஒரு வார்டில் இருந்து இன்னொரு  வார்டு, ஸ்கேன் எடுக்க செல்லும் போது சிசிடிவி கேமரா பதிவு அனைத்து வைக்க அப்போலோ பாதுகாப்பு அதிகாரி இளங்கோவிடம் அரசாங்கம் கேட்டு கொண்டதால் அவ்வாறு செய்தோம் என்று கூறினார்.  அவரது பதிலை பிரமாண வாக்குமூலமாக தாக்கல் செய்யுமாறு ஆணையம் தெரிவித்துள்ளது. போயஸ்கார்டனில் தான் சிசிடிவி பதிவு இருக்கிறது. இப்போது அரசு கட்டுபாட்டில் தான்  போயஸ்கார்டன் இருக்கிறது. தேவையென்றால் அவர்களே எடுத்து கொள்ளலாம். 2016 செப்டம்பர் 22ம் தேதி ஜெயலலிதா மயங்கி விழுந்த போது அந்த அறையில் 2 பணிபெண்கள் இருந்தார் என்றால், அவரை ஆணையம் விசாரிக்க விட்டால் நாங்கள் அவர்களை விசாரிக்க வேண்டும்  என்று கோருவோம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: