சென்னை- சேலம் 8 வழிச்சாலைக்காக நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு: ஆட்சேபனை கூட்டத்தில் பரபரப்பு

கலசபாக்கம்: ஆட்சேபனை தெரிவிக்கும் கூட்டத்தில் சென்னை- சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னை- சேலம் இடையே பசுமை வழிச்சாலைக்கு திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகாவில் ராந்தம், பெலாசூர், விளாங்குப்பம் மற்றும் கலசபாக்கம் தாலுகாவில் தென்பள்ளிப்பட்டு கிராமங்களை சேர்ந்த 67 விவசாயிகளுக்கு ஆட்சேபனை கூட்டத்தில் பங்கேற்பதற்கான கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதற்கான கூட்டம் கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் வெற்றிவேல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. இதில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

அவர்கள் பசுமை சாலைக்கு  நிலம் கையப்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வாழ்வாதாரத்தை இழக்கும் பசுமை சாலை எங்களுக்கு தேவையில்லை விவசாய நிலம் தான் வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.

சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கை விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். கூட்டம் நடைபெறுவதையொட்டி காலை முதலே தாலுகா அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விவசாயிகளை கடும் சோதனைக்கு பிறகே கூட்டத்தில் பங்கேற்க அனுப்பி வைத்தனர். தாலுகா அலுவலகத்திற்கு பல்வேறு கோரிக்கைகளுக்காக பொதுமக்கள் மனு அளிக்க வந்திருந்தனர். அவர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: