புதிய சொத்து வரி அறிக்கை குறித்து ஆட்சேபனை தெரிவிக்க 15 நாள் கெடு : இன்று முதல் வீடுவீடாக நோட்டீஸ்

சென்னை: புதிய சொத்து வரி தொடர்பான அறிக்கை மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் இன்று முதல் வீடு வீடாக விநியோகம் செய்யப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட அமைப்புகளுக்கான சொத்து வரியை மறு சீராய்வு செய்து கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு அரசாணை  வெளியிட்டது. அதன்படி, குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும், குடியிருப்பு இல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டது.இதை தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்துபவர்கள் அனைவரும் தங்களின்  சொத்துவரி சுயமதிப்பீட்டு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி  சார்பில் அறிவிக்கப்பட்டது. இதன்பிறகு 8 லட்சம் பேர் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இவர்களின் புதிய சொத்துவரி தொடர்பான அறிக்கையை மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் தயார் செய்து வந்தனர். அந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில் புதிய சொத்துவரி தொடர்பான விவரங்களை மாநகராட்சி இணையதளத்தில் அப்லோடு செய்துள்ளனர். அதில், ஏதேனும் ஆட்சேபணைகள் இருந்தால், வரும் 15 நாட்களில் தெரிவிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: புதிய சொத்துவரி தொடர்பான அறிக்கை நாளை (இன்று) முதல் வீடு வீடாக விநியோகம் செய்யப்படும். இந்தப் பணியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஈடுபடவுள்ளனர்.  15 மண்டலங்களில் உள்ள 12 லட்சம் வீடுகளுக்கு இந்த அறிக்கை வழங்கப்படவுள்ளது.  அதில், புதியதாக திருத்தியமைக்கப்பட்ட சொத்துவரி தொடர்பான விவரங்கள் இருக்கும். உரிமையாளர்கள் தங்களது சொத்துவரி நம்பரை  மாநகராட்சி இணையதளத்தில் பதிவு செய்தால், அதில் அவரது புதிய மற்றும் பழைய சொத்துவரி விவரம் தெரியும். தங்களுக்கு அறிக்கை கிடைத்த நாளில் இருந்து 15 நாட்களுக்கு அந்த சொத்துவரியை செலுத்த ேவண்டும். இந்த புதிய சொத்துவரியின் மூலம் ₹200 கோடி கூடுதலாக மாநகராட்சிக்கு  வருமானம் கிடைக்கும். இப்போது சென்னை மாநகராட்சிக்கு அரையாண்டு சொத்துவரியாக ₹450 கோடி வருகிறது. புதிய சொத்துவரியின் மூலம் அரையாண்டிற்கு ₹200 கோடி அதிகமாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் வ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: