நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட 9 பேர் விடுதலை: 18 ஆண்டு விசாரணைக்கு பின் கோபி நீதிமன்றம் தீர்ப்பு

கோபி:  கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் 18 ஆண்டுக்கு பிறகு குற்றம்சாட்டப்பட்ட ஒன்பது பேர் கோபி அமர்வு நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள தொட்டகாஜனூரில் கன்னட நடிகர் ராஜ்குமாருக்கு வீடு இருந்தது. அங்கு தங்கியிருந்த அவரை கடந்த 30.07.2000 அன்று சந்தன வீரப்பன், அவனது கூட்டாளிகள் சந்திரகவுடா, சேத்துகுளி கோவிந்தன் மற்றும் கூட்டாளிகள் 11 சேர்ந்து கடத்திச் சென்றனர். பிணைக்கைதியாக இருந்த ராஜ்குமார், தமிழக-கர்நாடக அரசுகளின் பேச்சுவார்த்தையால் 108 நாட்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.  இந்த கடத்தல் தொடர்பாக, சந்தன வீரப்பன், சந்திரகவுடா, சேத்துகுளி கோவிந்தன், பசவண்ணா, புட்டுசாமி, நாகராஜ், ராமன், மல்லு, விழுப்புரத்தை சேர்ந்த அன்றில் ஏழுமலை, திருவாரூரை சேர்ந்த அமிர்தலிங்கம், தஞ்சையை சேர்ந்த மாரன், கோவிந்தராஜ், ரமேஷ் (இருவரும் கடலூரை சேர்ந்தவர்கள்), ஜெயங்கொண்டத்தை சேர்ந்த செல்வம் ஆகிய 14 பேர் மீது தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு கோபிசெட்டிப்பாளையம், மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு நடந்தபோது, 2004ம் ஆண்டு அதிரடிப்படையினரின் என்கவுன்ட்டரால் வீரப்பன், சேத்துகுளி கோவிந்தன், சந்திரகவுடா ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். வழக்கில் தொடர்புடைய மல்லு கடந்த ஆண்டு உயிரிழந்தார். ரமேஷ் என்பவர்  தலைமறைவாக இருந்தார். இதனிடையே, நடிகர் ராஜ்குமார்  கடந்த 2006ம் ஆண்டு உயிரிழந்தார். 9 பேர் மட்டும் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் 47 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 18 ஆண்டுக்கு பிறகு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் நீதிபதி மணி கூறியதாவது:

ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் இரு மாநில அரசுகளும் சரிவர வழக்கை நடத்தவில்லை.  

அரசு தரப்பு சாட்சிகள் 47 பேரும் பிறழ் சாட்சிகளாகவே உள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படவில்லை. கைது செய்யப்பட்டவர்களுக்கும் வீரப்பனுக்கும் தொடர்பு உள்ளது என்பதை காவல்துறை நிரூபிக்கவில்லை. மேலும் ஒருவர் கடத்தப்பட்டால் அவரது ரத்த சம்பந்தமான உறவினர்கள்தான் புகார் அளிக்க வேண்டும். ஆனால், ராஜ்குமார் உறவினர்களிடம் புகார் பெறாமல், கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் பெற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ராஜ்குமார்தான் நலமாக உள்ளதாக பேசி பதிவு செய்யப்பட்ட குறுந்தகடு ஒன்று தர்மராஜ் என்பவர் மூலம் காவல்துறைக்கு கிடைத்தது. அந்த குறுந்தகடை ஆய்வு செய்யவில்லை. அதை கொண்டு வந்த தர்மராஜிடமும் போலீசார் விசாரணை நடத்தவில்லை. இந்த தவறுகளை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக்கி வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விடுதலை செய்கிறேன். இவ்வாறு நீதிபதி மணி கூறினார்.

மேல்முறையீடு செய்வோம்

தீர்ப்பு குறித்து, அரசு வழக்கறிஞர் தனகோட்டிராம் கூறும்போது, இந்த வழக்கை பொறுத்தவரை அரசு தரப்பில் 47 சாட்சிகள், 51 ஆவணங்கள் மற்றும் 32 சான்று பொருட்கள் மூலம் குற்றத்தை சரியாக நிரூபித்துள்ளோம். இந்த வழக்கானது இரு மாநில அரசுகளும் சம்பந்தப்பட்டிருப்பதால், வழக்கை மேல் முறையீடு செய்வோம்’ என்று கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: