காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை எதிரொலி: மேட்டூருக்கு நீர்வரத்து 23,000 கனஅடியாக உயர்வு

பென்னாகரம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 23,000 கனஅடியாக அதிகரித்தது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதையடுத்து, இரு அணைகளில் இருந்து நீர்திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு நேற்று மாலை விநாடிக்கு 24,000 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. ஐந்தருவிகள் மற்றும் மெயின் அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று காலையில் விநாடிக்கு 5,032 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலையில் விநாடிக்கு 23,000 கனஅடியாக அதிகரித்தது. அணையிலிருந்து நீர்மின்நிலையம் மற்றும் சுரங்க மின்நிலையம் வழியாக விநாடிக்கு 22,000 கனஅடி, கிழக்கு, மேற்கு கால்வாயில் 800 கனஅடி என மொத்தம் 22,800 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 105.62 அடியாக இருந்தது,  நேற்று 104.47 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 70.75 டிஎம்சியாக உள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இனிவரும் நாட்களில் மழை அதிகரித்தால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: