ஆதார் அட்டை கட்டாயமாகுமா? உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

புதுடெல்லி: தனிமனித சுதந்தரத்தில் தலையீடு என குற்றம் சாட்டப்பட்ட ஆதார் அட்டை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளிக்கிறது.ஆதார் விவகாரத்தில் தனி மனிதனின் புகைப்படம், கைரேகை, கண்ணின் கருவிழி ஸ்கேன் ஆகியவற்றின் பதிவுகள் மேற்கொள்ளப்படுவதால் அதில் எந்த பிரச்னையும், பாதிப்பும் வராது என மத்திய அரசு தரப்பில் மக்களுக்கு அதிகாரப்பூர்வமான உத்தரவாதம் அளிக்கப்பட்டது.  இதையடுத்து ஆதார் எண்ணை அனைத்து திட்டங்களிலும் இணைக்க மத்திய அரசு கட்டாயமாக்கியது. இதற்கு பொதுமக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து அரசு திட்டங்களுக்கு கட்டாயப்படுத்தப்படும் ஆதாருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 27 வழக்குகளை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி தொடங்கி மே வரை தொடர்ந்து நான்கு மாதங்களாக மொத்தம் 38 நாட்கள் விசாரித்தனர்.

 அப்போது, ‘‘தனிமனித சுதந்திரம் என்பது முழுமையாக இருக்க கூடியது இல்லை. அதனால் தனிநபர் மனித சுதந்திரம் என்பது சட்டத்திற்கு உட்பட்டது தான் என்றும், அரசியல் சாசன சட்டம் 21ன் படி எந்த ஒரு தனி நபரும் சட்டப்படி உருவாக்கப்பட்ட எந்த ஒரு விசாரணைக்கும் உட்பட வேண்டும் என்பதால் தான் சிறை தண்டனை மற்றும் மரண தண்டனையை அரசு நடைமுறை படுத்தியுள்ளது. அதனால் தனி மனிதனின் ஒவ்வொரு அங்கமும் அடிப்படை உரிமையே’’ என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதற்கு மனுதாரர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டு முடித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “தனி மனித விவரங்களை கேட்பதில் சில வரைமுறைகள் கண்டிப்பாக தேவை’’ எனக்கூறி வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் கடந்த மே 10ம் தேதி ஒத்திவைத்தனர். இந்த நிலையில் தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாக குற்றம்சாட்டப்பட்ட ஆதார் அட்டை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா அமர்விலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.

நேரலைக்கும் தீர்ப்பு:

நீதிமன்றங்களில் நடக்கும் அனைத்து வழக்குகளையும் நேரலை செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு விசாரித்தது. அப்போது, “நீதிமன்ற விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யும் விவகாரத்தில் எந்த ஆட்சேபணையும் கிடையாது. இந்த திட்டத்தை முதல் கட்டமாக கீழமை நீதிமன்றங்களில் செயல்படுத்தி பார்க்கலாம்’’ எனக்கூறி, இவ்வாறான திட்டத்தை பாதுகாப்போடும், நவீன தொழில் நுட்பத்தோடும் எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து விரிவான அறிக்கையை மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. வழக்கின் அனைத்துக்கட்ட விசாரணைகளும் முடிந்த நிலையில் தீர்ப்பு மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கிலும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: