×

இஸ்ரேல் போலீசாருக்கு சீருடைகள் தைக்கும் கேரள தனியார் நிறுவனம் : கடந்த 3 ஆண்டில் ஒரு லட்சம் சப்ளை

திருவனந்தபுரம்: இஸ்ரேல் போலீசாருக்கு கேரளாவை சேர்ந்த தனியார் நிறுவனம் சீருடைகளை தைத்து வழங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சம் சட்டைகள் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. கேரளாவின் கண்ணூரில் இஸ்ரேல் நாட்டு போலீசாருக்கு சீருடைகள் தயார் செய்து அனுப்பப்படுகின்றன. கண்ணூர் மாவட்டத்தின் வலியவெளிச்சம் பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் இயங்கும் மரியான் அப்பேரல் என்ற தனியார் நிறுவனம் தான் இந்தப்பணியில் ஈடுபட்டு வருகிறது. தொடுபுழாவை சேர்ந்த வர்த்தகர் தாமஸ் ஒலிக்கல் என்பவருக்கு சொந்தமான இந்த நிறுவனம் குவைத் நாட்டின் தீயணைப்புதுறை, எல்லை பாதுகாவலர்களுக்கும் சீருடைகளை தைத்து வழங்குகிறது. இஸ்ரேல் போலீசாருக்கு சீருடைகளை தயாரித்து வழங்குவது தொடர்பாக தாமஸ் ஒலிக்கல் கூறியதாவது:

லேசான ஊதா நிறத்தில் கைத்தறி உடைகளில் போலீசாரின் சீருடைகள் தைக்கப்படுகின்றன. இதில் 2 பாக்கெட்கள், இஸ்ரேல் காவல்துறையின் அடையாளச் சின்னமும் இடம்பெற்றிருக்கும். இதற்காக அமெரிக்காவில் இருந்து துணி இறக்குமதி செய்யப்படுகிறது. சில நேரங்களில் மும்பையில் உள்ள நூற்பாலையில் இருந்தும்  துணிகளை பெற்று சீருடைகள் தயாரிக்கப்படுகிறது. சுமார் 850 தையற்கலைஞர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் பெண்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.மரியான் நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் சிஜின் குமார் கூறியதாவது:கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சம் சட்டைகளை இஸ்ரேலில் உள்ள ஆண், பெண் என இருபாலர் போலீசாருக்கும் தயாரித்து வழங்கியுள்ளோம். குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்கள் எங்கள் நிறுவனத்திற்கு வந்து உடை தைக்கும் பணியை கண்காணிப்பார்கள். விரைவில் பிலிப்பைன்ஸ் நாட்டின் ராணுவத்திற்கும் சீருடை தயாரிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Israeli Police, Uniforms, Private Institute of Kerala
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்