மாநிலங்களின் சராசரி பற்றாக்குறை 13 சதவீதமாக குறைவு ஜிஎஸ்டி வருவாய் அள்ளுகிறது தமிழகம்

* பரிதாப நிலையில் புதுச்சேரி, இமாசல பிரதேசம்

* பெரும்பாலான மாநிலங்களில் வசூல் அமோகம்

புதுடெல்லி: தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஜிஎஸ்டி மாதாந்திர வசூல் இலக்கு பற்றாக்குறை குறைந்து வருகிறது. இதுபோல் மணிப்பூர், மிசோரம்,  அருணாசல பிரதேச மாநிலங்கள் இலக்கை தாண்டி வசூல் செய்துள்ளன.ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஆண்டு ஜூலையில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. ஜிஎஸ்டியால் மாநிலங்களின் வருவாய் பாதிக்கும் என்பதால் மத்திய அரசு இழப்பீடு  வழங்குகிறது. இதற்கிடையில், மாநிலங்களின் ஜிஎஸ்டி வருவாய் படிப்படியாக அதிகரித்து வருகிறது. மாநில ஜிஎஸ்டி மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறை கடந்த ஆண்டு  ஆகஸ்டில் 28.3 சதவீதமாக இருந்தது. இது கடந்த பிப்ரவரி மாதம் 23.7 சதவீதமாக குறைந்தது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், மாநிலங்களின் மாதாந்திர வருவாய் மற்றும் வசூல் பற்றாக்குறை சதவீதம்  தெரிவிக்கப்பட்டுளளன. கடந்த ஆண்டு முதல் கடந்த ஜூன் மாதம் வரையிலான ஜிஎஸ்டி வசூல் அடிப்படையில் மாநிலங்களின் சராசரி பற்றாக்குறை விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில்  மாநிலங்களின் சராசரி ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறை ₹5,986 கோடியாக குறைந்துள்ளது. அதாவது 13 சதவீதமாக சரிந்துள்ளது. மத்திய அரசு மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது ₹44,620  கோடியாக உள்ளது.

புதுச்சேரி, இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் பற்றாக்குறை மிக அதிகமாக உள்ளது. புதுச்சேரி 43 சதவீத பற்றாக்குறையுடன் மிகுந்த பரிதாப  நிலையில் இருக்கிறது. ஆனால் மணிப்பூர், மிசோரம், அருணாசல பிரதேசம் ஆகியவை இலக்கை விஞ்சி வசூல் சாதனை படைத்துள்ளன. கர்நாடகாவில் 20 சதவீத பற்றாக்குறை உள்ளது.  மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா, சிக்கிம் மாநிலங்கள் ஏறக்குறைய வசூல் இலக்கை நெருங்கி வருகின்றன. தமிழகத்தில் 3 சதவீதம் மட்டுமே பற்றாக்குறை உள்ளது. மகாராஷ்டிராவில் 2  சதவீத பற்றாக்குறை உள்ளது என புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: