தமிழக போலீஸ் விசாரணைக்கு உதவ தயார் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுப்பு: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

சென்னை: சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுப்பு தெரிவித்துள்ளதாக மத்திய அரசு வக்கீல் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.  தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் கோடிக்கணக்கான மதிப்புள்ள சிலைகள் காணாமல் போனது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐஜி பொன்.மாணிக்க வேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து,  2017ம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டார்.  இந்நிலையில், சிலை கடத்தலில் சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரிக்க வேண்டியுள்ளதாக கூறி, சிலைக்கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி வக்கீல் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு டிவிஷன் பெஞ்ச், விசாரித்தது.  வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ சிறப்பு வக்கீல் சீனிவாசன் ஆஜராகி, சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை  விசாரிக்க சிபிஐ மறுத்து கடிதம் அனுப்பியுள்ளது. அதில், தேவைப்பட்டால் வௌிநாடுகளில் வழக்கு தொடர்பான விசாரணை போன்ற நடவடிக்கைகளுக்கு சிபிஐ உதவி செய்யும் என்று கூறப்பட்டுள்ளது என்று கூறி சிபிஐ இயக்குநர் தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதத்தை தாக்கல் செய்தார்.  கடிதத்தை படித்துப் பார்த்த நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணிடம் கடிதம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அட்வகேட் ஜெனரல், சிலை கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை அனுப்பி வைக்கும்படியும், அதன் அடிப்படையில் இந்த வழக்குகளை சிபிஐ விசாரிக்க முடியுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், உயர் நீதிமன்ற தடை காரணமாகவே மத்திய அரசு மேல் நடவடிக்கையை தொடர முடியவில்லை என மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  இதையடுத்து, சிலை கடத்தல் தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், சிபிஐயில் ஆள் பற்றாக்குறை இருப்பதாலும் சிலை கடத்தல் வழக்குகள் விசாரணைக்கு ஒத்துழைப்பு மட்டுமே அளிக்க முடியும் என சிபிஐ தெரிவித்துள்ளது.  வழக்குகளை சிபிஐக்கு மாற்றி அரசாணை பிறப்பிப்பதற்கு முன் உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் முதலில் அரசாணை பிறப்பித்தது ஏன்? என்று அட்வகேட் ஜெனரலிடம் நீதிபதிகள் கேட்டனர்.  இதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல்,  சிபிஐ அனுப்பிய கடிதம் குறித்து தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என நீதிபதிகளிடம் கோரினார்.

இதை ஏற்று, வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: