ஆண்டின் சிறந்த வீரர் .... லூகா மோட்ரிச்சுக்கு பிபா விருது

லண்டன்: ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான பிபா விருது குரோஷிய அணி கேப்டன் லூகா மோட்ரிச்சுக்கு வழங்கப்பட்டது. சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு பிபா சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. லண்டனில் நேற்று முன்தினம் இரவு நடந்த வண்ணமயமான விழாவில், நட்சத்திர வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்) மற்றும் முகமது சாலாவின் (எகிப்து) கடும் போட்டிக்கிடையே சிறந்த வீரர் விருதை மோட்ரிச் (33 வயது) தட்டிச் சென்றார்.

பிபா விருது பெறுவதில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ இருவரும் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இம்முறை மோட்ரிச் சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுள்ளார். ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்ஸ் லீக் தொடரில் தொடர்ந்து 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதில் முக்கிய பங்காற்றியதுடன், பிபா உலக கோப்பையில் குரோஷிய அணிக்கு தலைமையேற்று இறுதிப் போட்டி வரை முன்னேற வைத்தது மோட்ரிச்சுக்கு சாதகமாக அமைந்தது.

பிரேசில் மகளிர் கால்பந்து அணியின் மார்தா (32 வயது) சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். இவர் 6வது முறையாக இந்த விருதை பெற்றுள்ளார். சிறந்த பயிற்சியாளராக பிரான்ஸ் அணியின் டிடியர் டெஸ்சாம்ப்ஸ், சிறந்த கோல் கீப்பராக பெல்ஜியம் அணியின் திபாட் கோர்டாய்ஸ் விருது பெற்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: