சில்லி பாயின்ட்...

* 12வது ஹீரோ இந்தியன் ஓபன் மகளிர் கோல்ப் போட்டித் தொடர் டெல்லி, டிஎல்எப் கோல்ப் & கன்ட்ரி கிளப் மைதானத்தில் அக்டோபர் 18ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் 30 நாடுகளை சேர்ந்த 120 வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர்.

* ‘இந்திய யு-16 மற்றும் யு-20 கால்பந்து அணிகள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் இந்த அணிகள் மிகப் பெரிய வெற்றிகளைகுவிப்பது நிச்சயம்’ என்று இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் செட்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* கொரியா ஓபன் பேட்மின்டன் தொடரின் பிரதான சுற்றுக்கு முன்னேற முடியாமல் இந்திய வீரர் அஜய் ஜெயராம் ஏமாற்றத்துடன் வெளியேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றில் சீனாவின் ஸாவோ ஜுன்பெங்குடன் மோதிய ஜெயராம் 24-26, 18-21 என்ற நேர் செட்களில் போராடி தோற்றார்.

* கேரளாவின் பிரப்பன்கோடு நகரில் நடைபெற்று வரும் 72வது சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரில், உள்ளூர் வீரர் சாஜன் பிரகாஷ் 5 பிரிவுகளில் களமிறங்கி அனைத்திலும் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

* போலந்தில் நடைபெற்ற 13வது சர்வதேச குத்துச்சண்டை போட்டியின் மகளிர் 52 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை சந்தீப் கவுர் (16 வயது) தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இறுதிப் போட்டியில் போலந்தின் கரோலினா அம்புஸ்காவுடன் மோதிய கவுர் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்றார். இவர் சண்டிகரை சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

* சவுதி அரேபியாவில் அக்டோபர் 16ம் தேதி பிரேசில் - அர்ஜென்டினா கால்பந்து அணிகள் மோதும் நட்பு ரீதியிலான போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில்  இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளதால் அர்ஜென்டினா அணி சார்பில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி களமிறங்க மாட்டார் என பயிற்சியாளர் ஸ்கலோனி அறிவித்துள்ளார்.

* இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுன்டி கிளப் போட்டிகளில் சசெக்ஸ் அணிக்காக விளையாடி வரும் இந்திய வீரர் முரளி விஜய் தொடர்ச்சியாக 56, 100, 85, 80 ரன் விளாசி அசத்தியுள்ளார்.

* கடந்த ஓராண்டு காலத்தில் 5 சர்வதேச அணிகளின் கேப்டன்களை ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபடுமாறு சூதாட்ட தரகர்கள் அணுகியதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும், அவர்களின் பெயர்கள் தெரிவிக்கப்படவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: