தேசிய விளையாட்டு விருதுகளை வழங்கி கவுரவித்தார் ஜனாதிபதி : கோஹ்லி, மீராபாய்க்கு கேல் ரத்னா

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லி மற்றும் பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு,  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  கேல் ரத்னா விருது வழங்கி கவுரவித்தார். விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி கவுரவித்து வருகிறது. இதன்படி, இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா டெல்லி ராஷ்டிரபதி பவனில் நேற்று நடந்தது. இதில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்தார். இதில், உயரிய விருதாக கருதப்படும் கேல் ரத்னா விருதினை இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லியும், பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானுவும் பெற்றனர். கடந்த ஆண்டு பத்ம விருது பெற்ற கோஹ்லி, சச்சின் டெண்டுல்கர் (1997), மகேந்திர சிங் டோனி (2007) ஆகியோருக்குப் பிறகு கேல் ரத்னா விருது பெறும் 3வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

தமிழக டேபிள்டென்னிஸ் வீரர் சத்யனுக்கு அர்ஜூனா விருதினை ஜனாதிபதி வழங்கினார். சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டியில் சத்யன் அடங்கிய இந்திய அணி, குழு போட்டியில் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது. ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ், கிரிக்கெட் வீராங்கனை மந்தனா, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா உள்ளிட்டோர் அர்ஜூனா விருதுகளை பெற்றனர். சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியா விருது தமிழக டேபிள்டென்னிஸ் பயிற்சியாளர் னிவாச ராவ் உள்ளிட்ட 8 பேருக்கும், வாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருது 4 பேருக்கும் வழங்கப்பட்டது.

ரூ.7.5 லட்சம் பரிசு

ஆண்டுதோறும் விளையாட்டு விருதுகள் மேஜர் தயான்சந்த் பிறந்தநாளான ஆகஸ்ட் 29ம் தேதி வழங்கப்படுவது வழக்கம். இந்தாண்டு ஜகார்த்தாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்ததால், விருது வழங்கும் விழா செப்டம்பருக்கு மாற்றப்பட்டது. கேல் ரத்னா விருது பெற்ற கோஹ்லி, மீராபாய்க்கு பரிசுத் தொகையாக தலா ₹7.5 லட்சமும், அர்ஜூனா விருது பெற்றவர்களுக்கு தலா ₹5 லட்சமும் வழங்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: