குட்கா வழக்கில் சிபிஐ மீண்டும் அதிரடி உணவுத்துறை அதிகாரி கைது: இதுவரை 6 பேர் சிறையிலடைப்பு

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் மேலும் ஒரு அரசு அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும், குட்கா போதைப்பொருளை விற்பனை செய்யக்கூடாது என தமிழக அரசு கடந்த 2013ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், உத்தரவையும் மீறி,  குட்காவை தமிழகம் முழுவதும் தாராளமாக விற்பனை செய்ய அமைச்சர், டிஜிபி, முன்னாள் போலீஸ் கமிஷனர், இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை, மத்திய கலால் துறையை சேர்ந்த அதிகாரிகள் என பலருக்கு குட்கா தயாரிப்பாளர்கள் ரூ.40 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து திமுக தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, கடந்த 5ம் தேதி சிபிஐ அதிகாரிகள் டிஜிபி டிகே.ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், அமைச்சர் வீடு உள்ளிட்ட 40 இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தி, கட்டுக்கட்டாக ஆவணங்களை கைப்பற்றினர். இதன் தொடர்ச்சியாக சிபிஐ, குட்கா தயாரிப்பாளரான மாதவராவ், பங்குதாரர்கள் உமா சங்கர் குப்தா, சீனிவாச ராவ் மற்றும் குட்கா விற்பனை செய்யவும், தயாரிக்கவும் ஒத்துழைத்த மத்திய கலால் துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோரை கடந்த 6ம் தேதி சிறையில் அடைத்தனர்.  பின்னர் சிபிஐ அதிகாரிகள், 5 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில் மாதவராவ், சீனிவாசராவ் ஆகியோர் சிபிஐயிடம் அனைத்து உண்மைகளையும் கூறியதாக கூறப்படுகிறது. மேலும் உடந்தையாக இருந்த அதிகாரிகள் பட்டியலையும் சிபிஐயிடம் இருவரும் கொடுத்ததாகவும் கூறப்பட்டது.

இதை தொடர்ந்து குட்கா தயாரிக்க சான்றிதழ் வழங்கி, குட்காவை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் மாதவராவ் உள்ளிட்டோருக்கு மிகவும் உறுதுணையாக இருந்ததாக கூறி திருவள்ளூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியவரும், தற்போது சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருபவருமான சிவகுமார் என்பவரை சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர். பின்னர், அவரை சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி திருநீலபிரசாத் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி, சிவகுமாரை வரும் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் மற்ற 5 பேரின் நீதிமன்ற காவலும் அன்றுடன் முடிவடைவது குறிப்பிடத்தக்கது. குட்கா முறைகேடு வழக்கில் மேலும் ஒரு அரசு அதிகாரி கைது செய்யப்பட்டிப்பது அரசியல் வட்டாரத்திலும், அதிகாரிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சிவகுமார் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தி, பல நாட்களுக்கு பின்னர் அவரை கைது செய்துள்ளனர். எனவே அடுத்தடுத்து மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.  ஏற்கனவே 5 பேரை சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதேபோல் சிவகுமாரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சிவகுமார்தான், சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இப்போது, அவரே சிபிஐயால் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன் ஆகியோர் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர். மனு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பு வக்கீல் வாதிடுகையில், பாண்டியன் மாதம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியுள்ளார். மேலும் அவர் 5 நட்சத்திர விடுதிகளில் தங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகிறது. செந்தில் முருகனும் லஞ்சம் வாங்கியது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்களை ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை கலைத்து விடுவார்கள். எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிடுகையில், இருவரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்து வருகின்றனர். மேலும் சம்மன் அனுப்பினால், ஆஜராக தயாராக உள்ளனர் என்று வாதிட்டார். இதைக்கேட்ட நீதிபதி, இருவரது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: