குற்றப்பின்னணி உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிட தடையில்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: கிரிமினல் வழக்குகளில் எம்பி, எம்எல்ஏக்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருந்தாலும், அவர்கள் தேர்தலில் போட்டியிட எந்த தடையும் விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் நிற்க வாழ்நாள் முழுவதும் நிரந்தர தடை விதிக்க வேண்டும் என பாஜ.வைச் சேர்ந்த அஸ்வனி உபாயாயா மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.  அதில் அவர் கூறியிருந்ததாவது: அரசு மற்றும் நீதித்துறை பணிகளில் உள்ள ஒருவர் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் அவர்கள் தொடர்ந்து பணியாற்ற தடை விதிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் கிரிமினல் குற்ற வழக்கில் எம்பி, எம்எல்ஏக்கள் ஆகிய அரசியல்வாதிகள் தண்டிக்கப்படுகிறபோது தண்டனை முடிந்து 6 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டால் அவர்கள் மீண்டும் எம்பி, எம்எல்ஏ மற்றும் அமைச்சராக கூட பதவி வகிக்க முடியும் என்ற சட்ட விதிகள் உள்ளது.

இது அரசு ஊழியர்களுடன் ஒப்பிடுகையில் அரசியல்வாதிகளுக்கு மாறுபட்ட விதிகளாக உள்ளது.  இதில் நீதிமன்றம் அமல்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது. மேலும், குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்தலில் நிற்பதற்கு தடை விதிப்பதோடு கடும் தண்டனை விதிக்க வேண்டும். இல்லையேல் அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கத்தை ஒழிக்க முடியாது. இதைத்தவிர ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருந்தாலே அவரை மறுதேர்தல் முதல் போட்டியிட நிரந்தர தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முதலில் விசாரித்து வந்த நிலையில் பின்னர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. அப்போது, “கிரிமினல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்களை மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தலைமை தேர்தல் ஆணையம், தனது வாதத்தில், “அரசியலில் கிரிமினல்களின் தலையீட்டை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக 1997ம் ஆண்டே பரிந்துரை செய்யப்பட்டுவிட்டது. ஆனால் மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் எம்பி, எம்எல்ஏக்கள் தொடர்பான கிரிமினல் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிட்டது. மேலும் அதன் பணியானது முழுமையாக முடிந்து விட்டதா? சம்பந்தப்பட்ட

சிறப்பு நீதிமன்றங்களுக்கு குற்றவாளிகள் சார்ந்த அனைத்து வழக்குகளும் மாற்றியமைக்கப்பட்டு விட்டதா? எத்தனை வழக்குகள் இன்னும் மாற்றப்படாமல் நிலுவையில் உள்ளது?

அது என்னென்ன அம்சங்கள் கொண்ட வழக்காக உள்ளது என அனைத்து விவரங்களும் அடங்கிய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசு மற்றும் மாநில தலைமைச் செயலாளர்கள் பதிலளிக்க கடந்த விசாரனையின்போது உத்தரவிட்டது. இதுதவிர வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததாக தெரிவித்த நீதிமன்றம் தீர்ப்பை மட்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் கன்வில்கர், சந்திராசூட், ரோகிண்டன் பாலி நாரிமன் மற்றும் இந்து மல்கோத்ரா ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பை வழங்கியது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

எம்பி, எம்எல்ஏக்கள் மீதான ஊழல் விவகாரத்தில் அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து இருந்தாலும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது. அதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது. இருப்பினும் ஊழல் என்பது நாட்டின் ஒட்டுமொத்த எதிர்ப்பு சக்தியையும் வடிகட்டி விடும். மேலும் அது ஒரு பொருளாதார தீங்கு மற்றும் தீவிரவாத குற்றம் கொண்டவையாகும். இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் தீர ஆலோசனை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் அங்கீகாரம் பெற்றுள்ள கட்சியைச் சார்ந்த அரசியல் பிரமுகர் ஊழல் செய்தவர் என தெரியவந்தால் அக்கட்சி இணையதளம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையத்தின் இணையதளம் ஆகியவற்றில் அவர்களது பெயர் பளிச்சென்று இருக்கும்படி பெரிய எழுத்துக்களால் பதிவு செய்யப்பட வேண்டும்.

மேலும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி பற்றி தெரியவந்தால் தான் வாக்காளர்கள் புரிந்து கொண்டு யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்ய இயலும். எனவே வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பற்றிய முழு குற்றப்பின்னணியும் கொடுக்கப்பட வேண்டும். கிரிமினல் குற்றப்பின்னணி கொண்டவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்வதை அரசியல் கட்சிகளும் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் நாட்டின் மாண்பை காக்க வேண்டிய முக்கிய பொறுப்பு உள்ளது. எனவே அதற்கேற்ப கிரிமினல் குற்றப்பின்னணி இல்லாதவர்களை பொதுசேவைக்கு அழைத்து வர வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் விரைவில் ஒரு தீர்வு காண வேண்டும். அதனை ஒட்டு மொத்த நாடும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு நீதிபதிகள் தீர்பளித்தனர். இந்த தீர்ப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள குற்றப்பின்னணி கொண்ட எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தற்போது தப்பித்துள்ளனர். இதைத்தவிர குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வதற்கு வழிவகை செய்யும் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. அதோடு அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் அந்த சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் ஜெயலலிதா, லல்லு பிரசாத் யாதவ் போன்றவர்கள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆலோசனையை ஏற்பார்களா? முன்னாள் தேர்தல் ஆணையர் சந்தேகம்

குற்றப்பின்னணி கொண்டவர்களை அரசியலில் இருந்து அகற்ற நாடாளுமன்றமே உரிய சட்டங்களை உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பேசிய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, “அத்தகைய சட்டங்கள் உருவாக்கப்பட்டால் அது மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால் துரதிருஷ்டவசமாக அத்தகைய சட்டங்களை உருவாக்குவதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டுவதில்லை. ஆனால் இதுகுறித்து உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், அவர்கள் துரித நடவடிக்கை எடுப்பார்களா என்பது குறித்து பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

‘1993ல்தான் தாக்கம் உணரப்பட்டது’

கடந்த 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பில், அரசியல் குற்றப்பின்னணி மிகவும் வலிமையாக உணரப்பட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றப்பின்னணி கொண்ட எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது என்று நேற்று தங்களது தீர்ப்பில் தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, “அரசியல் குற்றப்பின்னணி என்பது இந்திய அரசியலில் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். ஆனால் அதன் தாக்கம் கடந்த 1993 மும்பை குண்டு வெடிப்பில் வலிமையாக உணரப்பட்டது. அரசியல் ஆதரவு கொண்ட, குற்ற கும்பல்கள் உள்ளிட்டவர்கள் இதனை அரங்கேற்றினர்” என்று தெரிவித்தனர். ஓரா கமிட்டியின் அறிக்கையை மேற்கோள் காட்டிய நீதிபதிகள், பல குற்றவாளிகள், உள்ளாட்சி தேர்தல், எம்எல்ஏ, எம்பி. தேர்தல்களில் போட்டியிடுவது குறித்தும் வருத்தம் தெரிவித்தனர்.

எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் பெருமூச்சு

இந்தியா முழுவதும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மொத்தம் 4 ஆயிரத்து 896 பேர் உள்ளனர். இவர்களில் 1,765 பேர் கிரிமினல் குற்றப்பின்னணி உடையவர்கள். அதாவது மொத்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களில் 36 சதவீதம் பேர் கிரிமினல் குற்ற வழக்குகளை எதிர் கொண்டுள்ளனர். அவர்கள் மீதான கிரிமினல் குற்ற வழக்குகள் நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன. இந்த எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீது மொத்தம் 3 ஆயிரத்து 45 கிரிமினல் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட எம்.பி, எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நேற்று ஒரு வேளை உச்ச நீதிமன்றம் ஏற்று இருந்தால் இந்த 1,765 பேரின் பதவி ஆட்டம் கண்டு இருக்கும். இதனால் அவர்கள் அனைவரும் தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இதில் கிரிமினல் அரசியல்வாதிகளில் தமிழகத்தில் உள்ள 234 எம்.எல்.ஏ.க்களில் மொத்தம் 178 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தீர்ப்புக்கு மத்திய அரசு வரவேற்பு

குற்றப்பின்னணி உடைய எம்பி, எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க முடியாது, நாடாளுமன்றமே இது தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும், என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று மத்திய அரசு கூறியுள்ளது.. இதுதொடர்பாக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கப்படுகின்றது. உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து விவரமாக படித்து ஆய்வு செய்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும்” என்றார்.

‘இனி சட்டத்தின்படி தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்’

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் “தேர்தல் ஆணையம் முழு அதிகாரத்தையும் கொண்டுள்ளது என்ற உண்மையை மறுக்க முடியாது. ஆணையத்தின் நோக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். நியாயமான வெளிப்படையான தேர்தல் நடத்தப்படுகின்றதா என கண்காணிப்பதற்காக அதிகாரம் அதனிடம் உள்ளது. எனினும் அதன் அதிகாரம் வரம்புகளை கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு ஏற்ப தேர்தல் ஆணையம் இனி செயல்பட வேண்டும். அதனை மீறக்கூடாது” என்று குறிப்பிட்டுள்ளது.

வக்கீல் தொழிலுக்கும் தடையில்லை

எம்பி, எம்.எல்.ஏக்களாக இருப்பவர்கள் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணியாற்றக் கூடாது என பாஜ கட்சியை சார்ந்த அஸ்வனி உபாயாயா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதன் விசாரணையின் போது எம்பி, எம்.எல்.ஏ பதவி என்பது அவர்களது ஆயுட்காலம் முழுவதும் இருக்காது. ஆட்சி மாற்றம் வரும்போது அதுவும் தாமாகவே மாறிவிடும். ஆனால் வழக்கறிஞர் தொழில் என்பது அவர்களது வாழ்நாள் முழுவதும் நடைமுறையில் உள்ள ஒன்றாகும். அதற்கு தடை விதிக்க நேரிட்டால் வழக்கறிஞர்களின் வாழ்வாதாரமே இருளாகிவிடும் என மத்திய அரசு தரப்பில் நீதிபதிகள் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா ,நீதிபதிகள் கன்வில்கர், சந்திராசூட் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு கூறியது. அதில், “எம்பி, எம்.எல்.ஏக்களாக இருப்பவர்கள் நீதிமன்றங்களில் பணியாற்ற தடை விதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் பார் கவுன்சில் ஆப் இந்தியா ஒரு ஒழுங்கு நடவடிக்கையை வேண்டுமானால் மேற்கொள்ளலாம்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: