×

ரூ.1.85 கோடியில் புனரமைக்கப்பட்ட குறிஞ்சிப்பாடி ஸ்ரீவேணுகோபால சாமி கோயில் ஊஞ்சல் மண்டபம் இடிந்தது

குறிஞ்சிப்பாடி: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டையில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத வேணுகோபாலசாமி கோயில் உள்ளது. 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயிலின் எதிர்புறத்தில் 50 அடி உயரத்தில் கருங்கல் ஊஞ்சல் மண்டபம் உள்ளது. இந்நிலையில் அறநிலையத்துறை சார்பில் ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ஊஞ்சல் மண்டபத்தின் ஒருபாதி மேற்கூரை பெரும் சத்தத்துடன் இடிந்து விழுந்தது. அப்போது ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக மண்டபத்தின் மற்றொரு பகுதியிலும் விரிசல் ஏற்பட்டது.


இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, ஜெர்மனி சிவஸ்ரீ பாஸ்கர சுவாமிகள் தலைமையிலான குழுவினர் மற்றும் ஊர் முக்கியதர்கள் மூலம் வேணுகோபாலசுவாமி ஆலய கோபுரம் மற்றும் மதில் சுவர் சீரமைக்கப்பட்டு திருப்பணி நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. ஊஞ்சல் மண்டபம் மட்டும், அரசு நிதியில் ரூ.1 கோடியே 85 லட்சம் செலவில் கட்டப்படுகிறது. இப்பணி தனியாரிடம் கொடுக்கப்பட்டதால், அவர்களின் கவனக்குறைவால் மண்டபத்தில் கூரை இடிந்து விழுந்தது. பின்னர் அதை சரி செய்தனர். இருப்பினும் தரமான முறையில் பணி நடைபெறவில்லை. இப்பணியை அரசு பொறியாளர் நேரில் வந்து பார்வையிடாததாலும், அவரது மேற்பார்வையில் பணி நடைபெறாததாலும் மண்டபத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு போர்க்கால அடிப்படையில் உடைந்த மண்டபம் மற்றும் விரிசல் ஏற்பட்ட மற்ற பகுதிகளையும் சீரமைத்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Temple,Swing Hall,Sri Venugopala Samy
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...