×

கண்மாய் தூர் வாரப்படாததால் வீணாகும் தண்ணீர்: விவசாயிகள் கவலை

தேவாரம்: தேவாரம் பெரியதேவியம்மன் கண்மாயை தூர் வாரி வரத்து வாய்க்கால் சரிசெய்யப்படாததால் தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் தேவாரம் பேரூராட்சியில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இங்குள்ள மக்கள் குடிநீர் தேவைக்கு போர்வெல் அமைத்துள்ளனர். இதன் முக்கிய நீராதாரமாக விளங்குவது பெரியதேவியம்மன் கண்மாய். 900 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கண்மாய்க்கு மழைக்காலங்களில் பெரம்புவெட்டி ஓடை வழியே தண்ணீர் வரத்து இருக்கும்.  கண்மாய் நிரம்பி மாறுகால் பாய்ந்து டி.ஓவுலாபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி, கோணாம்பட்டி குளங்களுக்கு தண்ணீர் செல்லும். பெரியதேவியம்மன் கண்மாயை பராமரிக்கும் பொதுப்பணித்துறை மஞ்சளாறு வடிநில கோட்ட அதிகாரிகள் கண்மாயை பராமரிப்பதே இல்லை. இதனால் மழைநீரை சேமிக்க முடியவில்லை. வரத்துகால்வாய் முள்புதர் நிரம்பி, மண்மேவி கிடப்பதால் தண்ணீர் கண்மாய்க்கு செல்லாமல் அப்படியே வெளியேறுகிறது.

அதிக மழை பெய்யும்போது வெளியேறக்கூடிய தண்ணீர் தேவாரம்-போடி சாலைகளில் நிரம்பி வீணாகிறது. எனவே இதனை உடனடியாக சரிசெய்ய பொதுப்பணித்துறையின் மஞ்சளாறு வடிநில கோட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தேவாரம் மட்டும் அல்லாமல் சுற்றிலும் உள்ள 5 கிராமங்களுக்கு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் பெரியதேவியம்மன் கண்மாயில் மராமத்து பணிகளே செய்வதில்லை. வரத்து கால்வாய், கிளை குளங்களுக்கு செல்லக்கூடிய கால்வாய் போன்றவை முள்புதர்களாலும், மணல் மேவியும் கிடக்கிறது. இதனை உடனடியாக தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

அதிகாரிகள் அலட்சியம்: அதிக மழை பெய்யும்போது பெரியதேவியம்மன் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு வரத்து கால்வாய் வழியே தண்ணீர் வீணாகி வெளியேறியது. இதுகுறித்து தேவாரம் விவசாயிகள் மஞ்சளாறு வடிநில கோட்ட அலுவலகம் உள்ள தேனிக்கே சென்று பலமுறை முறையிட்டனர். ஆனால் மனுவை வாங்கி பரணில் வீசிய அதிகாரிகள் இதனை சரிசெய்யவில்லை. தென்மேற்கு பருவமழை தண்ணீர்தான் வீணாகிவிட்டது. இனிவரக்கூடிய வடகிழக்கு பருவமழை தண்ணீரையாவது சேமிக்க உடனடியாக வரத்து கால்வாய் மற்றும் கண்மாயை தூர் வார கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மழைக்காலங்களில் கண்மாய் உடையும் அபாயம் உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Water, farmers,
× RELATED செவ்வாய் கிரகத்தில் நீர் ஆதாரம்...