வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருந்து வாங்க பல மணி நேரம் காத்திருக்கும் நோயாளிகள்

வேலூர்: வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருந்து வாங்க காத்திருக்கும் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆன்லைனில் பதிவு செய்ய தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கிருந்து சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கும் நோயாளிகள் உயர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுகின்றனர். இங்கு வேலூர் மட்டுமின்றி, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உட்பட தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். அதேபோல், மருத்துவமனை படுக்கையிலும் நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு வந்து ெசல்லும் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சையுடன், மருந்துகளும் வழங்கப்படுகிறது.இந்நிலையில், மருந்துகள் வாங்குவதற்காக நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நீடிக்கிறது.

இதனால் வயதானவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மருந்துகளை விரைவாக வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருந்துகளுக்காக காத்திருந்து அவதிக்குள்ளான நோயாளிகள் கூறுகையில், ‘அரசு மருத்துவமனைகளை ெபாறுத்தவரை ஏழைகள் மட்டுமே வந்து செல்கிறோம். மருந்து வாங்க நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கிறோம். நோயாளிகளுடன் யாரும் வராத நிலையில், நோயாளிகளே வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதில் மாதத்துக்கு 2 முறை சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகளை வாங்கிச் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகிறோம். எனவே மருந்துகளை விரைந்து வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட மருத்துவ பிரிவுகளிலேயே மருந்துகளை வழங்கினால் நோயாளிகளின் சிரமம் குறையும்’ என்றனர்.இதுகுறித்து மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 1100க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுனர்கள் பணிச்சுமையில் இருந்து வருகின்றனர். மேலும், ஆன்லைனில் பதிவு செய்த பிறகு நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கும் நடைமுறை கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு செயல்படுத்தப்பட்டது. இந்நிலையில், அடிக்கடி சர்வரில் பழுது ஏற்படுகிறது. மேலும் ஆன்லைனில் பதிவு செய்ய காலதாமதம் ஏற்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் மருந்துகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட மருத்துவ பிரிவுகளிலேயே நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்குவது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: