ஈரோடு டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் `சரக்கு’விற்பனை ஜோர்

ஈரோடு: ஈரோட்டில் டாஸ்மாக் கடையில் சட்ட விரோதமாக மதுவிற்பனையை தடுக்க கோரி கடந்த வாரம் எஸ்பி உத்தரவிட்டார். ஆனால் 24 மணி நேரம் படுஜோராக மதுவிற்பனை நடந்து வருகிறது.ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெறும் மது விற்பனையை தடுக்க எஸ்பி சக்தி கணேசன் உத்தரவிட்டார். இதனையடுத்து கடந்த 21ம் தேதி முதல் போலீசார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரோந்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்ததாக 42பேரை கைது செய்து, 300க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஈரோடு பவானி ரோடு வ.உ.சி. பார்க்கை அடுத்து அசோசியேஷன் பெட்ரோல் பங்க் அருகே அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் பார் உரிமம் எடுத்தவர்கள் டாஸ்மாக் கடை மூடியிருக்கும் நேரத்தில், அதாவது அதிகாலை முதல் இரவு வரை என 24 மணி நேரமும் அதிக லாபத்திற்கு மதுபானங்களை விற்பனை செய்கின்றனர். இந்த கடை ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்டு வருகிறது.

போலீசார் ரோந்து பணியினை சரிவர செய்யாமலும், அப்படியே ரோந்து வந்தாலும் சட்ட விரோதமான மதுவிற்பனையை கண்டு கொள்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இந்த கடைகளில் மதுவிற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.எஸ்பியின் உத்தரவினை காதில் போட்டு கொள்ளாமல், ஆளுங்கட்சியினர் ஆதரவாக சட்ட விரோதமாக மது விற்பனையை போலீசார்கள் ஆதரித்து வருவதாகவும் புகார்கள் எழுகின்றன.

 இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த கடை மெயின் ரோட்டிலேயே இருப்பதால் அதிகாலையிலேயே மது பிரியர்கள் கடைக்கு வர துவங்கி விடுகின்றனர். டாஸ்மாக் கடையின் பாரில் வழக்கமாக மது விற்பனை நடைபெறுவதுபோல, டாஸ்மாக் கடை மூடியிருக்கும் வேலையிலும் நடைபெறுகிறது.

இந்த கடையில் 24 மணி நேரமும் மதுவிற்பனை நடைபெறுவதால் குடிமகன்கள் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு குடியிருப்புகளின் முன் மதுபோதையில் மயங்கி கிடக்கின்றனர். இதனால் காலை பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மாவட்ட எஸ்பியும், டாஸ்மாக் மேலாளரும் உடனடி நடவடிக்கை எடுத்து சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்யும் கடையின் பார் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: