பெட்ரோல், டீசல் விலை உயர்வு மத்திய அரசை கண்டித்து மாபெரும் போராட்டம்: வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் அறிவிப்பு

திருவொற்றியூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார். மணலி  பெரிய சேக்காடு முருகேசன் தெருவில் மணலி சேக்காடு பொது வியாபாரிகள்  சங்க  மாளிகை திறப்பு விழா சங்க தலைவர் டி.ஏ.சண்முகம் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு சங்க மாளிகையை திறந்து வைத்தனர். வெள்ளையன் நிருபர்களிடம் கூறியதாவது, “பெட்ரோல்,  டீசல்  விலையை ஏற்றிமக்களிடம் பிக்பாக்கெட் அடிப்பதுபோல மத்திய அரசு செயல்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்  விலை அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை பாதியாக குறைக்கவேண்டும்.  

  பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தினால் லாரிகளின் வாடகை உயர்ந்துள்ளது. இதனால் விலைவாசி உச்சத்தை தொட்டு மக்கள் பெரும்  வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.  வெளிநாட்டு ஆன்லைன் வர்த்தகத்தினால்  வணிகர்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகிறார்கள்.  சில்லரை வியாபாரிகளை கண்டுகொள்ளாமல் அந்நிய நிறுவனங்களுக்கு தமிழக அரசு துணை போகிறது.     விரைவில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வணிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும்” என்றார். விழாவில், நிர்வாகிகள் பூபாலகிருஷ்ணன், செல்வராஜ், நாராயண்லால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: