×

வெடிகுண்டுகளுடன் 7 மாவோயிஸ்ட் கைது

திருமலை: ஆந்திராவில் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏவை சுட்டுகொன்ற சம்பவத்தை தொடர்ந்து 4 மாநில எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டீஸ்கர் மாநிலத்தில் பதுங்கியிருந்த 7 மாவோயிஸ்ட்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மக்கள் பிரதிநிதிகளை கொல்ல திட்டமிட்டிருப்பது அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்கு தொகுதி தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ சர்வேஸ்வரா ராவ், முன்னாள் எம்எல்ஏ சிவேரி சோமா. இவர்கள் நேற்று முன்தினம் அரக்கு தொகுதிக்குட்பட்ட விவிடிபுட் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றனர். அப்போது மாவோயிஸ்ட்கள் திடீரென சரமாரி துப்பாக்கி சூடு நடத்தி இருவரையும் சுட்டுக் கொன்றனர். இச்சம்பவத்திற்கு அமெரிக்க சுற்றுப்பயணத்தில் உள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் மாவோயிஸ்ட்கள் தாக்குதல் சம்பவத்தில் புலனாய்வுத்துறை தோல்வியடைந்துள்ளதாகவும், இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை வழங்கும்படி அமெரிக்க பயணத்தில் இருந்த ஆந்திர டிஜிபி ஆர்.பி.தாகூருக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். இதனால் டிஜிபி ஆர்.பி.தாகூர் தனது சுற்றுப்பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு அமெரிக்காவில் இருந்து ஐதராபாத் வழியாக விசாகப்பட்டினத்திற்கு இன்று மாலை வருகிறார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி காவல்துறை சார்பில் மாவோயிஸ்ட்கள் மூலமாக ஆபத்து இருப்பதாக எம்எல்ஏ சர்வேஸ்வரராவுக்கு எச்சரிக்கை கடிதத்தை போலீசார் வழங்கியுள்ளனர். ஆனால் அதனை பெற்ற அவர், அலட்சியமாக இருந்துவிட்டதால் நேற்று முன்தினம் மாவோயிஸ்ட்களால் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து கூடுதல் டிஜிபி ஹரிஷ்குமார் குப்தா, டிஐஜி ஸ்ரீராம் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் ஒடிசா டிஜிபி ராஜேந்திரபிரசாத் தலைமையிலான போலீசார், ஆந்திரா-ஒடிசா எல்லையில் ட்ரோன் கேமரா மூலம் மாவோயிஸ்ட்களின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதேபோல் ஆந்திர போலீசாரும் பாடேரூ, பார்வதிபுரம், அரக்கு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ கொலை செய்யப்பட்டால் ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, சட்டீஸ்கர் மாநில எல்லைகளில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் எச்சரிக்கையாக இருக்கும்படி நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சட்டீஸ்கர் மாநிலத்தில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள் 7 பேரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்த வெடிபொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். கைதான 7 பேரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், பைப் வெடிகுண்டுகள் மூலம் மக்கள் பிரதிநிதிகளை கொல்ல இவர்கள் சதிதிட்டம் தீட்டியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ஆந்திராவில் ஆளும்கட்சி எம்எல்ஏ கொலை செய்யப்பட்ட நிலையில் மக்கள் பிரதிநிதிகளை கொலை செய்ய மாவோயிஸ்டுகள் சதிதிட்டம் தீட்டியிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maoist, arrested, bombs
× RELATED உதகையில் முத்தூட் நிதி நிறுவனத்தில் 380...