×

குட்கா விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அதிகாரி சிவகுமாருக்கு அக்.4ம் தேதி வரை சிறை: சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவு

சென்னை: குட்கா லஞ்ச ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சிவகுமாரை அக்டோபர் 4ம் தேதி வரை சிறையிலடைக்க சென்னை சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்கள் சட்ட விரோதமாக விற்கப்பட்டு வருகின்றது. இதற்கு மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் உதவி செய்வதாகக் கூறி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இந்த விவகாரம் குறித்து மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணை, நீதிமன்ற உத்தரவால் சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து குட்கா ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் விஜய பாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ், புழல் உதவி கமி‌ஷனராக பணிபுரிந்த மன்னர் மன்னன், செங்குன்றத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சம்பத் ஆகியோரது வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக மாதவராவ் உள்ளிட்ட 5 பேர் கடந்த 7-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் குட்கா வழக்கில் தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சிவக்குமார் சென்னையில் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவகுமாருக்கு அக்டோபர் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gudka scam,food officer Sivakumar,jail,CBI court
× RELATED யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம்: மகளிர்...