கேப்டனாக 200-வது போட்டியில் களம்கண்டார் மகேந்திர சிங் தோனி

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை இன்று எதிர்கொள்கிறது. இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் இன்றைய போட்டியில் பல்வேறு மாற்றங்களுடன் இந்திய அணி களமிறங்கி உள்ளது. இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டதால் தோனி கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 696 நாட்களுக்கு பிறகு மீண்டும் கேப்டனாகி உள்ளார் தோனி. இப்போட்டியின் மூலம் தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கடந்த 2015-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகினார். இதனையடுத்து கோஹ்லி கேப்டன் பதவியேற்றார். நீண்ட நாட்களுக்கு பின்னர் தோனி தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளதால் இப்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போட்டியில் களமிறங்கியதன் மூலம் இந்தியாவிற்காக அதிக சர்வதேச போட்டிகளில் களமிறங்கிய வீரர்கள் பட்டியலில் டிராவிட்டை முந்தி தோனி 2-வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் சச்சின் 664 போட்டிகளிலும், 2-வது இடத்தில் தோனி 505 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். தோனி கேப்டனாக களமிறங்கும் 200-வது போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: