விருதுநகர் மார்க்கெட்டில் எள், கடலை வரத்து குறைவால் கடலெண்ணெய், நல்லெண்ணெய் விலை தொடர்ந்து உயர்வு

விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில் கடலை எண்ணெய், நல்லெண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது. பெரும்பாலான எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் சிறுது நகரில் இருப்பதால் அங்குள்ள மார்க்கெட்டில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் எண்ணெய் விலை நியாயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாகவே எண்ணெய்  விலை கணிசமாக உயர்ந்து வருகின்றது. விருதுநகர் மார்க்கெட்டில் கடந்த மாதம் நல்லெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.195 ஆக இருந்தது. ஆனால்  இந்த மாதம் 55 ரூபாய் உயர்ந்து ஒரு லிட்டரின் விலை ரூ.250 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல கடந்த மாதம் கடலை எண்ணெயின் விலை லிட்டருக்கு ரூ.123 ஆக இருந்தது. ஆனால் இந்த மாதம் 17 ரூபாய் உயர்ந்து லிட்டர் ரூ.140 ஆக விற்கப்படுகின்றது.

பாமாயில் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் லிட்டருக்கு 69 ரூபாயாக  விற்கப்படுகிறது. நல்லெண்ணெய் தயாரிப்புக்கு தேவைப்படும் மூல பொருட்களான எள், மற்றும் கடலை எண்ணெய்க்கு தேவையான நிலக்கடலை ஆகியவற்றின் பற்றாக்குறையே இந்த விலை உயர்விற்கு காரணம் என எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இந்த மூலப்பொருட்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், எள் மற்றும் நிலக்கடலையின் வரத்து குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மூலப்பொருட்கள் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதும் விலை உயர்விற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதே நிலை நீடித்தால் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளனர். இதுபோன்று கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் அதிக விலைக்கு விற்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: