சின்னமனூர் அருகே பாதை அமைத்து அணையில் மணல் கொள்ளை

சின்னமனூர்: சின்னமனூர் அருகே தனிப்பாதை அமைத்து சட்டவிரோதமாக எரசை மரிகாட் அணையிலும், சித்திரைகோனார் குளம், சின்ன பெரிய ஊத்து ஒடை களிலும் கரம்பை, மணல் கொள்ளை வெகுஜோராக நடைபெறுகிறது. அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து விவசாயம் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். சின்னமனூர் அருகே எரச்சக்கநாயக்கனூர் 14 கிராம ஊராட்சிகளில் பெரிய கிராமமாக திகழ்ந்து வருகிறது. 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஹைவேவிஸ் மற்றும் பெருமாள் மலைகளின் அடிவாரத்தில் இந்த ஊர் இருப்பதால் விவசாயமே அடையாளமாகவும், ஆதாரமாகவும் உள்ளது. வாழையும், தென்னையும், காய்கறிகளும் தொடர்ந்து இந்த ஊரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

மழைக்காலங்களில் மலையடிவாரத்தில் உள்ள மரிகாட் என்ற மஞ்சள் அணையில் வெள்ளம் நிரம்பியவுடன் மறுகால் பாயும் போது சித்திரை கோனார் குளத்திற்கு வரும் தண்ணீர், அங்கிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள எரசநாயக்கர் குளத்திற்கு வந்தடையும். இந்த ஊர் முழுவதும் நல்ல வளம் கொண்ட மண் என்பதால் எந்த பயிர் விதைத்தாலும் சாகுபடி செய்வதற்கு இலகுவாக இருக்கும் என விவசாயிகள் நம்புகின்றனர். அத்துடன் 80 சதவீத குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் அட்சய பாத்திரமாக மரிகாட் அணை இருந்து வருகிறது. அத்துடன் கன்னிசேர்வைபட்டி, முத்துலாபுரம், அப்பிபட்டி கிராம ஊராட்சிகளுக்கும் இந்த அணையின் நிலத்தடிநீர் குடிநீராக செல்கிறது.

சின்னமனூரில் பருவமழை தவறியதால் சரிவர வான்நீர் கிடைக்காமல் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக வறட்சி நிலவி வருவதால், குடிநீர் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது, கிணறுகளிலும் நிலத்தடிநீர் அதல பாதாளத்திற்கு போய் விட்டதால் விவசாயிகளும், பொதுமக்களும் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்த நிலையில் வறண்டு வரும் நிலையில் உள்ள மரிகாட் அணை, சித்திரை கோனார் குளம், 7 கி.மீ தொலைவில் உள்ள பெரிய, சின்ன ஓடைகளில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அனுமதியின்றி அதிகாரிகளின் துணையோடு மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.

இங்கிருந்து எடுக்கப்படும் கரம்பை மண் செங்கல் காளவாசல்களுக்கு அனுப்பப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக டிப்பர் லாரி, டிராக்டர் மூலம் இந்த மணல் கொள்ளை நடைபெறுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்காக தனிப்பாதை அமைத்து ஜரூராக மணல் கடத்தல் நடக்கிறது. நிலத்தடி நீருக்கு உறுதுணையாக இருக்கின்ற மணல் மற்றும் அதனைக் காக்கும் கரம்பை மண்ணையும் அள்ளி வருவதால் விவசாயம் விரைவில் அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: