நள்ளிரவு கொட்டித்தீர்த்த கனமழை : மல்லசமுத்திரத்தில் ஏரிகள் நிரம்பி 20 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

திருச்செங்கோடு: மல்லசமுத்திரத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த கனமழையால், அப்பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பி வெளியேறிய உபரிநீர், 20க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்து கொண்டது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள மல்லசமுத்திரத்தில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த கனமழையால் செண்பகமாதேவி மற்றும் மங்களம் ஏரிகள் நிரம்பி வழிந்தன. ஏரியில் இருந்து வெளியேறிய உபரிநீர் சாலைகளில் ஆறாக ஓடியது. மல்லசமுத்திரத்தில் உள்ள கருப்பனார் கோயில் வீதியில் உள்ள தாழ்வான பகுதியில் மழைநீர் புகுந்து வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதில் சுமார் 20 வீடுகள் பாதிக்கப்பட்டன.

சாக்கடை கழிவுநீரும் கலந்துகொண்டதால் துர்நாற்றம் வீசியதுடன், விஷ ஜந்துகள் வீடுகளுக்கு புகுந்தன. இதனால் மக்கள் விடிய விடிய அச்சத்துடன் விழித்திருந்தனர். ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் செல்லும் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வார வேண்டும். சாக்கடை கால்வாயில் மண்டியுள்ள மண்ணை அகற்றி ஆழப்படுத்த வேண்டும் என  அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். மல்லசமுத்திரத்தில் நேற்று முன்தினம் 12 செமீ மழை பெய்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த திடீர் மழையால் ஏரிகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடைந்துள்ளனர். நடப்பு பருவத்தில் நிலக்கடலை பயிரிட, இந்த மழை உதவியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: