கடையம் அருகே பஸ் வசதி இல்லாததால் 2 கி.மீ தூரம் நடந்தே பள்ளி செல்லும் மாணவிகள்

கடையம்:  கடையம் அருகே கட்டேறிபட்டி, புங்கம்பட்டி, மயிலப்பபுரம் கிராமங்கள் உள்ளன. இந்த பகுதி மாணவ மாணவிகள் பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள அவ்வையார் பள்ளி, ஆவுடையானூர் பள்ளி, தபி சொக்கலால் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு பஸ் மூலம் சென்று படித்து வருகின்றனர். கட்டேறிபட்டி, புங்கம்பட்டி மற்றும் மயிலப்பபுரம் கிராமங்களுக்கு காலை மற்றும் மாலை நேரம் பஸ் வசதி இல்லாததால் இந்த பகுதி மாணவ, மாணவிகள் புலவனூர் விலக்கு பகுதியிலிருந்து பஸ் ஏறி  பள்ளிக்கு சென்று வருகின்றனர். மாணவ மாணவிகள் தாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து புலவனூர் விலக்கு பகுதிக்கு செல்ல சுமார் 2 கிமீட்டர் தூரம் உள்ளது. இதனை கடக்க சுமார் அரை மணி நேரம் ஆகிறது.

வேறு வழியில்லாமல் கடையத்திலிருந்து புலவனூர், மேட்டூர் வழியாக பாவூர்சத்திரம் செல்லும் 16 நம்பர் அரசு பஸ்சில் தான் புலவனூர் விலக்கு சென்று மாணவ மாணவிகள் பயணம் செய்து வருகின்றனர். காலை 8.30மணிக்கு புலவனூர் விலக்கு பகுதிக்கு வரவேண்டிய இந்த பஸ் கடந்த சில மாதங்களாக காலை 7.45 மணிக்கே சென்று விடுகிறது. இதனால் இந்த பகுதி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கட்டேறிபட்டி, புங்கம்பட்டி, மயிலப்பபுரம் ஆகிய கிராமங்களுக்கு காலை நேரத்தில் பஸ வசதி இல்லாமல் மாணவ மாணவிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். காலையில் பஸ் ஏறுவதற்கு அரை மணி நேரம் நடந்து சென்றால் மாணவ,  மாணவிகள் சோர்வாகி படிப்பில் எப்படி கவனம் செலுத்துவார்கள் என பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர்.

மாலையிலும் பாவூர்சத்திரத்திலிருந்து கடையம் வரும் அரசு பஸ் இரண்டரை மணிக்கும், இதனை விட்டால் மாலை 6 மணிக்கு தான் உள்ளது. இதனால் பள்ளி முடிந்து மாணவ, மாணவிகள் வீடு வர இரவு 8 மணி ஆகிறது.  பள்ளி சென்ற குழந்தைகள் எப்போது வீட்டுக்கு வரும் என பெற்றோர் பீதிக்குள்ளாகி வருகின்றனர்.  தினமும் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கபட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் கட்டேறிபட்டி, புங்கம்பட்டி, மயிலப்பபுரம் ஆகிய கிராமங்களின் வழியாக பாவூர்சத்திரம் சென்று வர காலை, மாலை என இரு வேளைகளில் மாணவ மாணவிகள் நலன் கருத்தி பஸ் விட வேண்டும் என கிராம மக்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: