மாலத்தீவு அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: சீன ஆதரவு அதிபரான அப்துல்லா யமீன் படுதோல்வி

* 1200 குட்டித்தீவுகளை கொண்ட மாலத்தீவில் சமீப காலமாக அரசியல் குழப்ப நிலை உள்ளது.

* அங்கு முன்னாள் அதிபர் முகமது நஷீத் உள்ளிட்ட 9 அரசியல் தலைவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

* இந்த தீர்ப்பை அதிபர் அப்துல்லா யமீன் ஏற்காததால் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர்.

* அதை தொடர்ந்து பிப்ரவரி 5ம் தேதி அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. 45 நாட்களுக்கு பின் அவசர நிலை விலக்கப்பட்டு அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

* இந்திய பெருங்கடலில் உள்ள மாலத்தீவில் சமீப காலமாக சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

மாலே: மாலத்தீவு அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் இப்ராகீம் வெற்றி பெற்றார். தற்போதைய அதிபர் அப்துல்லா யமீன் படுதோல்வி அடைந்தார். யமீன் சீன ஆதரவு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாலத்தீவு அதிபராக அப்துல்லா யமீன் உள்ளார். சீனாவின் தீவிர ஆதரவாளர். அவரது முடிவுக்கு எதிராக, கைது செய்யப்பட்ட முன்னாள் அதிபர் உள்ளிட்ட தலைவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள்  கைது செய்யப்பட்டனர். இதனால் அரசியல் குழப்பம் ஏற்பட்டு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதன்பின் அங்கு அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 23ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில்  தற்போதைய அதிபர் அப்துல்லா யமீன், மாலத்தீவு முன்னேற்றக் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மாலத்தீவு ஜனநாயக கட்சி சார்பில் இப்ராகீம் முகமது வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அவருக்கு ஜூம்குவாரி கட்சி, அப்துல்லா கட்சி ஆகியவை ஆதரவு அளித்தன. அங்கு நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் மொத்தம் 90 சதவீத வாக்குகள் பதிவானது. அதாவது 2,62,000 பேர் வாக்களித்து இருந்தனர்.  இந்த வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன.  இதில், தொடக்கத்தில் இருந்தே அதிபர் அப்துல்லா யமீன் பின்னடைவை சந்தித்தார். எதிர்க்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டு இருந்த இப்ராகீம் முகமது பெருவாரியான வாக்குகள்  வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார். மொத்த வாக்காளர்களில் 58.3 சதவீத வாக்குகள் பெற்று இப்ராகீம் முகமது வெற்றி பெற்றதாக மாலத்தீவு தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இப்ராகீம் முகமது 1,34,616 ஓட்டுகளும், யமீன் 95,526 ஓட்டுகளும் பெற்றுள்ளனர். இதை மாலத்தீவு வெளியுறவு அமைச்சகமும் உறுதிப்படுத்தியது. இப்ராகீம் முகமது வெற்றியை அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும்  உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்தியா, சீனா, அமெரிக்கா வாழ்த்து: மாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இப்ராகீம் முகமதுவுக்கு இந்தியா மற்றும் சீனா, அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளன.

ஒருவார அவகாசம்

மாலத்தீவு தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டாலும், இதில் பிரச்னை இருந்தால் அதைப்பற்றி தெரிவிக்க ஒரு வார காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 2013ம் ஆண்டு தேர்தலில்  முன்னாள் அதிபர் நசீத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் உச்ச நீதிமன்றம் தலையிட்டு முடிவு நிறுத்தப்பட்டு, பின்னர் இரண்டாம் முறை எண்ணப்பட்டபோது அப்துல்லா யமீன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  ஆனால் இந்த முறை அப்படி நடக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த தேர்தல் முடிவை முறைப்படி அறிவிக்காவிட்டால் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன்  கூட்டமைப்பு நாடுகள் எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தோல்வியை ஏற்கிறேன்

தேர்தல் முடிவு குறித்து தற்போதைய அதிபர் அப்துல்லா யமீன் கூறுகையில், ‘‘தேர்தல் முடிவுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனது தோல்வியை ஏற்கிறேன். எளிதான ஆட்சி மாற்றத்திற்கு நான் நடவடிக்கை எடுப்பேன்.  மாலத்தீவு மக்கள் தங்களுக்கு யார் வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களை தேர்வு செய்துள்ளனர். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இப்ராகீம் முகமதுவை சந்தித்தேன்.  புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு  அப்போது வாழ்த்து தெரிவித்தேன். நவம்பர் 17 வரை அதிபர் பதவியில் இருப்பேன். அதன்பின் பதவி விலகுவேன்’ என்றார்.

‘யமீனுடன் பேசினேன்’

அதிபர் தேர்தல் வெற்றி அறிவிப்புக்கு பிறகு, எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேட்பாளர் இப்ராகீம் முகமது கூறுகையில், ‘மக்களின் விருப்பத்தை மதித்து, மென்மையாகவும், சமாதானமாகவும் அதிகாரத்தை மாற்ற யமீனை சந்தித்து  பேசினேன்” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: