சிகாகோ: உலக அணிக்கு எதிரான லேவர் கோப்பை டென்னிஸ் தொடரில், ஐரோப்பிய அணி 13-8 என்ற புள்ளிக் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. அமெரிக்காவின் சிகாகோ நகரில் முதல் முறையாக நடைபெற்ற இந்த தொடரின் கடைசி நாளில், ஒற்றையர் ஆட்டங்களில் ஐரோப்பிய அணி வீரர்கள் அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), ரோஜர் பெடரர் (சுவிஸ்) இருவரும் வெற்றியை வசப்படுதினர். உலக அணியின் கெவின் ஆண்டர்சனுடன் (தென் ஆப்ரிக்கா) மோதிய ஸ்வெரவ் 6-7 (3-7), 7-5, 10-7 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். மற்றொரு ஆட்டத்தில் பெடரர் 6-7 (5-7), 7-6 (10-8), 10-7 என்ற செட் கணக்கில் உலக அணியின் ஜான் ஐஸ்னரை (அமெரிக்கா) வீழ்த்தினார்.