ஐஎஸ்எல் கால்பந்து 5வது சீசன் சென்னையின் எப்சி அணி அறிவிப்பு: தனபால் கணேஷ் காயத்தால் அவதி

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 5வது சீசனில் விளையாட உள்ள  சென்னையின் எப்சி அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக தமிழக வீரர் தனபால் கணேஷ் இடம் பெறவில்லை.

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 5வது சீசன் இம்மாதம் 29ம் தேதி கொல்கத்தாவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்சி அணி வீரர்கள் அறிமுக விழா சென்னையில்  நேற்று நடைபெற்றது. பயிற்சியாளர் ஜான் கிரிகோரி, வீரர்களை   அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது: அணியில் இந்தமுறை நிறைய இளம் வீரர்களும், அனுபவ வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். கோல் கீப்பர் கரண்ஜித் சிங்  இந்தமுறையும் அணியில் தொடர்கிறார். அவருடன் மேலும் 2 கோல்கீப்பர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த சீசனில் சிறப்பாக விளையாடிய மெயில்சன் ஆல்வெஸ் இந்த முறை அணியின் கேப்டனாக செயல்படுவார்.  அவருடன் இனிகோ கல்டேரான், ஜேஜே அகஸ்டோ, பிரான்சிஸ்கோ பெர்னாண்டஸ், கிரிகோரி நெல்சன்  ஆகியோர் கரம் கோர்ப்பார்கள். புதிதாக சேர்ந்துள்ள இலி சபியா, ஆன்டோனியோ சலோம் அணிக்கு பலம் சேர்ப்பார்கள். தனபால் கணஷே் பயிற்சியின்போது காயம் அடைந்துள்ளார். அதனால் அவர் விளையாடுவது குறித்து  பின்னர் அறிவிக்கப்படும். எப்படியிருந்தாலும் முதல் 5 போட்டிகளில் அவர் விளையாடும் வாய்ப்பில்லை. கடந்த முறை திறமையை நிரூபித்த தனபால் கணேஷ் இந்த முறை ஆடாதது இழப்புதான். புதிதாக இடம் பெற்றுள்ள  தமிழக வீரர் சீனிவாசன் பாண்டியன் திறமையானவர். அவரை மட்டுமல்ல, இளம் வீரர்களை தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வோம்.

அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்களுக்கு அனுபவ வீரர்களின் ஆட்டம் பாடமாக இருக்கும்.  சென்னை அணியின் பி டீமில் இருந்த  ஹென்றி, பெத்தேஷ்வர், சோனுன்மாவியா ஆகியரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் நடப்பு  சாம்பியன் என்பதால்  அழுத்தம் ஏதுமில்லை. தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். மலேசியா, கோவாவில் நடந்த முகாம்கள், இப்போது போட்டிக்கு முந்தைய முகாம் ஆகியவவை வீரர்களின் திறனை மேம்படுத்தியுள்ளது.   வீரர்களை மனதளவில் வலுவானவர்களாக  இருக்க ஊக்கப்படுத்தி வருகிறோம். கோப்பையை தக்கவைப்பதே எங்கள் இலக்கு. எந்தவித அழுத்தமுமின்றி விளையாடி அதை சாதிப்போம். இவ்வாறு ஜான் கிரிகோரி தெரிவித்தார்.

உதவி பயிற்சியாளர்கள்  பால் குரோவ்ஸ், சயீத் சபீர் பாஷா ஆகியோர்  உடன் இருந்தனர். முதல் ஆட்டம்: சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் பெங்களூர் அணியை சந்திக்கிறது. இந்தப் போட்டி செப். 30ம் தேதி இரவு  பெங்களூரில் நடைபெறும்.  இந்த 2 அணிகள்தான் கடந்த சீசனின் இறுதிப் போட்டியில் விளையாடிய அணிகள்.

அணி விவரம்

கோல் கீப்பர்கள்: கரண்ஜித் சிங், சஞ்சிபன் கோஷ்,  நிகில் பெர்னார்ட். தடுப்பு ஆட்டக்காரர்கள்: மெயில்சன் ஆல்வெஸ் (பிரேசில்),  இனிகோ (ஸ்பெயின்), லால்ரின்சுவாலா, டோன்டன்பா சிங், லால்சின்லியனா,  சோமிங்கலியனா,   ஹென்றி ஆண்டோனய். நடுகளம்:  ராபல் அகஸ்டோ(பிரசில்),  கிரிகோரி நெல்சன்(நெதர்லாந்து),  ஆண்ட்ரியா ஒர்லாண்டி(இத்தாலி),  பிரான்சிஸ்கோ பெர்னான்டஸ்,  தாய்சிங்,  அனிரூத் தபா,  ஜெர்மன்பிரீத் சிங், சீனிவாசன்  பாண்டியன் (தமிழ்நாடு), ஐசக் வன்மால்சவமா,  பெத்தேஸ்வர் சிங், சோனுன்மாவியா. முன்களம்: ஜேஜே லால்பெகுலா, முகம்மது ரபி, ஆண்டோனியோ சலோம்  (பாலஸ்தீனம்).

தனபால் கணேஷ்

சென்னையை சேர்ந்த தனபால் கணேஷ்(24). முதலில் பூனா அணியில் இடம் பெற்றிருந்தார். பின்னர் 2015ம் ஆண்டு சென்னை அணியில் இணைந்தார். 2015, 2016 என இரண்டு சீசன்களிலும் ஒரு போட்டியில் கூட அவருக்கு  விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கு காயம் காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில் சென்னை அணியின் புதிய பயிற்சியாளராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட  ஜான் கிரிகோரி 2017-18 சீசனில்  தனபால் கணேஷை  பயன்படுத்திக் கொண்டார். கடந்த சீசனில் மட்டும் 17 போட்டிகளில் விளையாடினார். அதில் 2 கோல் அடித்து தவிர்க்க முடியாத வீரராக மாறினார்.

இந்த முறை அணியில் முக்கிய வீரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக தனபால் கணஷே் 25 பேர் கொண்ட சென்னை அணியில் இடம் பெறவில்லை. ஆனால்  நேற்று வீரர்கள் அறிமுக நிகழ்ச்சியின்போது 26வது வீரராக பங்கேற்றார்.

சீனிவாசன் பாண்டியன்

சென்னை அணியில் இடம் பெற்றுள்ள இன்னொரு  தமிழக ஆட்டக்காரர் சீனிவாசன் பாண்டியன்(22). தஞ்சாவூரை சேர்ந்தவர். இவர் 2015ம் ஆண்டு முதல் கிளப்களுக்காக விளையாடி வருகிறார். இந்தியன் வங்கி, விவா  அணிகளுக்காக விளையாடி உள்ளார். இப்போது சென்னை அணியில் இடம் பிடித்துள்ளார். உள்ளூர் ஆட்டக்காரர் தனபால் கணேஷ்  காயத்தால் விளையாட முடியாததால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு  உள்ளது. சென்னையில் நடைபெறும் போட்டியின்போது மாற்று வீரராக களம் இறக்கப்படலாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: