சிறுக சிறுக சேமித்தும் பயனில்லை என தொழிலாளர்கள் குமுறல் 3 ஆண்டாக இ.எல் விடுமுறை சம்பளம் ‘கட்’

சென்னை: சென்னையில் மாநகர பஸ் தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக இ.எல் விடுப்புக்கான சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் கடும் மனவேதனையில் உள்ளனர். தமிழக போக்குவரத்து கழகம்  சார்பில் இயக்கப்படும் அரசு பஸ்களில் கடந்த ஆண்டு திடீரென வரலாறு காணாத வகையில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. கட்டணம் உயர்த்தி 8 மாதங்களாகியும், போக்குவரத்துக் கழகங்களின் வருவாய்  இதுவரை எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் அதிகரிக்கவில்லை. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தை பொறுத்தவரை தினசரி வருவாய் வெறும் 9 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. எனவே, டிக்கெட் வருவாயை  அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை எம்டிசி நிர்வாகம் எடுத்து வருகிறது. பயணிகளை கவர 1,100க்கும் மேற்பட்ட பஸ்கள் சாதராண கட்டண பஸ்களாக மாற்றப்பட்டுள்ளது.

இருப்பினும் அதுகுறித்த விவரம் மக்களுக்கு தெரியவில்லை. இதையடுத்து சமீபத்தில், அனைத்து சாதாரண கட்டண பஸ்களின் முன்புறமும், இதில் குறைந்தபட்ச கட்டணம் 5 என்று எழுதப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இந்த  ஸ்டிக்கர் ஓட்டும் முயற்சிக்கு பயணிகளிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கிடையில், கடும் நிதி நெருக்கடியை காரணம் காட்டி ஊழியர்களின் பல்வேறு சலுகையை எம்டிசி நிர்வாகம் ரத்து செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.  அதன்படி, தொழிலாளர்களின் ஈடுசெய்யும் விடுப்புக்கான (இ.எல்) சம்பளம் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளதாக தொழிலாளர்கள் குமுறுகின்றனர். இதுகுறித்து எம்டிசி தொழிலாளர்கள் கூறியதாவது: தொழிலாளர்  சட்டப்படி பிற துறைகளை போல், அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு வருடத்துக்கு 15 நாட்கள் இ.எல் எனப்படும் ஈடுசெய்யும் விடுப்பு அனுமதிக்கப்படும். அந்த விடுமுறையை எடுக்காமல் இருந்தால்,  தொழிலாளர்களின் சம்பள அடிப்படையில் ஒருநாள் சம்பளம் வழங்கப்படும்.

பெரும்பாலான தொழிலாளர்கள், குழந்தைகளின் படிப்பு செலவுக்கு உதவும் என்பதால் அவசர விடுமுறையை எடுக்காமல் அதை விண்ணப்பமாக நிர்வாகத்திடம் ஒப்படைப்பார்கள். விண்ணப்பித்த அடுத்த மாதமே  அவர்களுக்குண்டான சம்பளத்தை நிர்வாகம் வழங்க வேண்டும். நெல்லை, கும்பகோணம், மதுரை, கோவை உள்ளிட்ட பிற போக்குவரத்துக் கழகங்களில் இந்த சம்பளம் முறையாக வழங்கப்படுகிறது. ஆனால், சென்னை மாநகர  போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 1.06.2016 முதல் 23.09.2018 வரை, அதாவது கடந்த 3 ஆண்டுகளாக தொழிலாளரின் ஈடுசெய்யும் விடுப்பை பிடித்தம் செய்துள்ளனர். ஆனால் அதற்கான சம்பளத்தை தொழிலாளர்களுக்கு  வழங்கவில்லை. அந்த தொகையை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வட்டிக்கு கடன் வாங்கி குழந்தைகளை சிரமத்துடன் படிக்க வைக்கின்றனர்.

எனவே, விடுப்புக்கான சம்பளத்தை வழங்கும்படி மாநகர போக்குவரத்துக் கழக மனிதவள மேம்பாட்டு அதிகாரி மற்றும் மேலாண் இயக்குனரிடம் புகார் அளித்துள்ளோம். ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதனால் மிகுந்த மனஉளைச்சல் மற்றும் வேதனையுடன் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவ்வாறு தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

* தொழிலாளர்களுக்கு வருடத்துக்கு 15 நாட்கள் இ.எல் எனப்படும் ஈடுசெய்யும் விடுப்பு அனுமதிக்கப்படும். அந்த விடுமுறையை எடுக்காமல் இருந்தால், தொழிலாளர்களின் சம்பள அடிப்படையில் ஒருநாள் சம்பளம் வழங்கப்படும்.

* பெரும்பாலான தொழிலாளர்கள், குழந்தைகளின் படிப்பு செலவுக்கு உதவும் என்பதால் அவசர விடுமுறையை எடுக்காமல் அதை விண்ணப்பமாக நிர்வாகத்திடம் ஒப்படைப்பார்கள். விண்ணப்பித்த அடுத்த மாதமே  அவர்களுக்குண்டான சம்பளத்தை நிர்வாகம் வழங்க வேண்டும். ஆனால், எம்டிசி வழங்குவதில்லை.

519 கோடி நஷ்டம்...

எம்டிசி சார்பில் தினமும் 3,439 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ் கட்டண உயர்வுக்கு முன் எம்டிசியின் தினசரி வருவாய் 2.56 கோடியாக இருந்தது. கட்டண உயர்வுக்கு பின் இந்த வருவாய் 3 கோடியில் இருந்து 3.50 கோடி வரை  உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெறும் 9 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. அதன்படி, தற்போது தினமும் சராசரியாக 2.79 கோடி வருவாய் கிடைக்கிறது. எதிர்பார்த்த அளவுக்கு போதிய வருவாய் கிடைக்காததால்,  கடந்த நிதியாண்டில் கூட எம்டிசி நிர்வாகம் 519 கோடி நஷ்டத்தில் இயங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கடும் நிதிநெருக்கடியில் தவிக்கும் எம்டிசி நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்கக்கூடிய பணபலன்களை  வழங்காமல் தட்டி கழித்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: